×

13 ஆண்டு ஆகியும் கும்பாபிஷேகம் செய்யாததால் பொலிவிழந்த மதுராந்தகம் ஏரிக்காத்த ராமர் கோயில்: பக்தர்கள் அதிருப்தி

மதுராந்தகம், ஜன. 13 : மதுராந்தகத்தில் உள்ள புகழ் பெற்ற ஏரிகாத்த ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 12 ஆண்டுகள் முடிந்த நிலையில் இதுவரை கும்பாபிஷேகம் செய்யாமல் இருப்பது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் நகரின் மையப்பகுதியில் ஏரிக்காத்த ராமர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆஞ்சநேயர் சன்னதி, மூலவர் ராமர், லக்ஷ்மணர், சீதாபிராட்டி ஆகியோர் கை கோர்த்த நிலையில் அரிதாக காணப்படும் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ஜனகவல்லி தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, தேசிகர் சன்னதி, ஆழ்வார்கள் சன்னதி, விஷ்வக்சேனர் சன்னதி, உடையவர் சன்னதி, லட்சுமி நரசிம்மர் சன்னதி ஆகிய 10 கோயில்கள் உள்ளன.

இந்த கோயிலுக்கு மதுராந்தகம் நகரில் மட்டும் இல்லாமல் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.
குறிப்பாக இங்கு வருடத்தில் பல விழாக்கள் தொடர்ந்து நடைபெறும். அவற்றில் முக்கியமாக பெரிய தேரோட்டத்துடன் நடைபெறும் 15 நாள் ஆனி மாத பிரம்மோற்சவ விழா, ஆடி மாதத்தில் நடைபெறும் திருவாடிப்பூரம் விழா, ஆவணி மாதத்தில் நடைபெறும் ராமானுஜருக்கான பஞ்ச சமஸ்காரம் உற்சவ விழா. இந்த விழாவானது தமிழகத்தில் வேறு எந்த கோயில்களிலும் நடைபெறுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் ராமானுஜர் பிறந்தது பெரும்புதூர் என்றாலும் அவர் தீட்சை பெற்றது மதுராந்தகம் ராமர் சன்னதியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
புரட்டாசி மாதத்தில் நடைபெறும் ஒன்பது நாள் நவராத்திரி உற்சவ விழா, ஐப்பசியில் நடைபெறும் தீபாவளி உற்சவ விழா, கார்த்திகை மாதத்தில் நடைபெறும் திருக்கார்த்திகை தீப விழா, மார்கழியில் நடைபெறும் பகல் பத்து, ராப்பத்து மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாக்கள், தை மாதத்தில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவங்கள், மாசி மாதத்தில் கோவிலின் எதிரே உள்ள புனித குளத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழா, பங்குனி மாதத்தில் நடைபெறும் பங்குனி உத்திர திருக்கல்யாணம் மற்றும் ராமநவமி உற்சவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு விழாக்கள் நடைபெறும் இந்த கோவிலுக்கு இதுவரை தற்போது நடைபெற்று இருக்க வேண்டிய கும்பாபிஷேக விழா நடைபெறாமல் இருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய கும்பாபிஷேகம் 13 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இதுவரையிலும் நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பிரசித்தி பெற்ற இந்த ராமர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : devotees ,Erikkatha Rama Temple ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...