×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பார்வேட்டை உற்சவம் ஏற்பாடுகள் மும்முரம்: ஆகம முறைப்படி நடத்த கோரிக்கை

காஞ்சிபுரம், ஜன. 13: காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் காணும் பொங்கல் அன்று நடைபெறும் பார்வேட்டை உற்சவத்தை ஆகம முறைப்படி நடத்த வேண்டும் என பக்தர் டில்லிபாபு என்பவர் கோயில் செயல் அலுவலர் முருகேசனிடம் மனு அளித்துள்ளார். இதுகுறித்து டில்லிபாபு அளித்துள்ள கோரிக்கை மனு விபரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் காணும் பொங்கல் அன்று நடைபெறும் பார்வேட்டை உற்சவத்தில் சுவாமி புறப்பட்டு திம்மசமுத்திர கிராமத்திற்கு சில ஆண்டுகளாக செல்கிறார். இந்த உற்சவத்தில் சுவாமி ஆபரணங்கள் அணிந்து பல்லக்கில் சென்று திம்மசமுத்திர கிராமத்தில் உள்ள திரிபுராந்தகேஸ்வரர் கோயில் அருகில் உள்ள மேடையில்,தெற்கு நோக்கி சுவாமியை வைத்து அபுஷேகம் நடைபெறும். பிறகு, இரவு,சபவாமி, வில், அம்பு ஆகியவை ஏந்தி கேடயத்தில் எழுந்தருளி கோயிலை வந்தடைவார்.

கடந்த 8-10-2019ம் தேதி நடைபெற்ற வன்னிமர பார்வேட்டை உற்சவத்திற்கு சுவாமி ஆபரணங்கள் அணிந்து வில், அம்பு ஆகியவை ஏந்தி கேடயத்தில் சென்று வன்னிமரத்தை வேட்டையாடுவது போன்ற நிகழ்வு நடைபெற்றது. இது, வன்னிமர பார்வேட்டை உற்சவம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பார்வேட்டைக்கு திம்மசமுத்திரத்திற்கு சுவாமி சென்று வேட்டையாடுவது போன்று எந்த நிகழ்வும் நடைபெறுவது கிடையாது. மேலும்,கோயிலில் ஆகமம் பயின்ற குருக்கள் இருந்தும் திம்மசமுத்திர பார்வேட்டை உற்சவம் என பெயர் சூட்டியுள்ளது வேதனை அளிக்கிறது.

சுவாமி எதை முன்னிறுத்தி வேட்டையாடுகின்றாரோ அதன் பெயரே உற்சவத்திற்கு வைக்கப்படும். ஆனால் இந்த உற்சவத்திற்கு கிராமத்தின் பெயரை வைத்திருப்பது உபயதாரரை ஏமாற்றும் செயலாக உள்ளது. மேலும் இந்த உற்சவத்தில் 3 அடி உயரமுள்ள உற்சவர் திருமேனிக்கு 100 அடி உயர சுவாமி திருமேனிக்கான அபிஷேக திரவியங்கள் செலவிடப்படுகின்றன. எனவே ஆகம விதிகளுக்கு மாறாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஆகம விதிப்படி பார்வேட்டை உற்சவத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : festival ,Kanchipuram Ekambaranath Temple ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...