×

இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் படத்துடன் பொங்கல் பரிசு: பொதுமக்கள் அதிர்ச்சி

செய்யூர்,  ஜன. 13 :  தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு ₹1000 பணத்துடன் கரும்பு, சர்க்கரை, அரிசி முந்திரிப்பருப்பு, திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் பை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் வினியோகம் செய்யப்படும் பைகளில் அரசு முத்திரையுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோர் படம் அச்சடிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் பொங்கல் பை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், இங்கு அரசு வழங்கிய பொங்கல் பையை தவிர்த்து வேறொரு பொங்கல் பை தயார் செய்து பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பொங்கல் பையில் முன்னாள் முதல்வர், தற்போதைய முதல்வர், துணை முதல்வர் மட்டுமின்றி கூடுதலாக காஞ்சி மாவட்ட அதிமுக செயலாளர் படம்,  பேரூராட்சி பகுதியிலுள்ள கடப்பாக்கம் மற்றும் கோட்டைக்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சங்கத் தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரின் படங்களும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அச்சடிக்கப்பட்ட பொங்கல் பையினால் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், புதிதாக உருவாகியுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும்  உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இதுபோன்று ஆளுங்கட்சியினர் வாக்குகளை பெற பொதுமக்களை சூழ்ச்சி வலையில் சிக்க வைக்க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : co-op leaders ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...