×

தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

சிவகங்கை, ஜன.13: சிவகங்கை மாவட்ட தொழிலாளர்களுக்கு கட்டுமான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்(ச.பா.தி) உஷா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான தொழிலில் அனுபவம் இருந்து உரிய சான்றிதழ் இல்லாத தொழிலாளர்களுக்கு கட்டுமான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. கொத்தனார், கம்பி வளைத்தல், பிளம்பர், தச்சுத்தொழில், கட்டிட வேலை மேற்பார்வையாளர், எலக்ட்ரீசியன், டைல்ஸ் கல் பதிப்பது, பெயிண்டர், நில அளவையர் ஆகிய பணி பிரிவுகளில் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தமிழகத்தை சேர்ந்தவராகவும், கட்டுமான பணிகளில் குறைந்தது 4 ஆண்டு அனுபவம் பெற்றும் இருக்க வேண்டும். பயிற்சி 3 நாட்கள் அளிக்கப்படும். மூன்று நாட்களுக்கு தினசரி ரூ.500 வீதம் ரூ.ஆயிரத்து 500 ஊக்கத் தொகை வழங்கப்படும். ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்கள், தொழிலாளர் உதவி ஆணையர்(ச.பா.தி), காஞ்சிரங்கால், வட்டார போக்குவரத்து மைதானம் செல்லும் வழி, சிவகங்கை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04575 240320 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயிற்சியில் சேரலாம்.  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா