×

திருப்புவனம் ஒன்றிய தலைவர் தேர்தல் அதிமுகவிற்கு உதவவே தள்ளிவைப்பு திமுக குற்றச்சாட்டு

சிவகங்கை, ஜன. 13:  திருப்புவனம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மெஜாரிட்டி இருந்தும் தேர்தலை வைத்து அதிமுக பேரம் நடத்த உதவி செய்வதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மீது திமுக குற்றம்சாட்டியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 ஒன்றியங்களில் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் கூறி திருப்புவனம் ஒன்றியக்குழுத்தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், கலெக்டர் ஜெயகாந்தனால் அறிவிப்பாணை ஒட்டப்பட்டது. மற்ற 11 ஒன்றியங்களில் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. எந்த ஒன்றியத்திலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை. இதில் ஆறு ஒன்றியங்களில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திருப்புவனம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 17 ஒன்றிய கவுன்சிலர்களில் திமுக கூட்டணியில் 10 உறுப்பினர்கள் உள்ளனர். அதிமுக கூட்டணியில் 5, அமமுக 1, சுயேச்சை 1 கவுன்சிலர்கள் உள்ளனர். திமுக கூட்டணி வெற்றி பெறும் ஒன்றியங்களில் ஒன்றாக திருப்புவனம் உள்ளது. உறுப்பினர்கள் பதவியேற்பின் போதும், நேற்று மறைமுக தேர்தலுக்கு உறுப்பினர்கள் வந்தபோதும் எவ்வித பிரச்சனையும் இல்லாத நிலையில் தேர்தல் ஒத்திவைப்பு அறிவிப்பு திமுக கூட்டணியினர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினர் தூண்டுதலில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுகவினர் சுயேச்சைகள், மாற்று கட்சியினரிடம் பேரம் பேசி குறுக்கு வழியில் ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றுகின்றனர். திருப்புவனத்திலும் அதுபோல் செய்ய முயற்சித்து தோல்வியடைந்தனர். கூடுதல் கால அவகாசம் கிடைத்தால் பேரம் நடத்தி பார்க்கலாம் எனக்கருதிய அதிமுகவினரின் தூண்டுதலுக்கு சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் துணைபோவது ஜனநாயக படுகொலை. பிரச்சனைகள் ஏதும் இல்லாத போது தேர்தலை நிறுத்தி, திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க பார்த்து இவர்கள் தான் பிரச்சினையையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளனர். உடனடியாக ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.  

Tags : DMK ,election ,UPA ,
× RELATED 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க...