×

போகி பண்டிகைக்கு பிளாஸ்டிக் எரிக்க தடை

சிவகங்கை, ஜன.13:  நாளை(ஜன.14) போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக் பைகள், டயர் உள்ளிட்ட பொருட்களை எரிக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய பொருட்களை எரிப்பது பழையன கழிதல் என்பதற்கான அடையாளமாக செய்யப்படுகிறது. இந்த நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச்சூழலுக்கு தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும். ஆனால் தற்போது நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் டயர், ரப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்ட செயற்கை பொருட்கள் எரிக்கப்படுகிறது. இதனால் நச்சுப்புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல், கண், காது, மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இது போன்ற செயல்கள் மூலம் காற்றை மாசு படுத்துவது சட்டப்படி குற்றமாகும். உயர் நீதிமன்றம் பழைய மரம், வரட்டி தவிர எதையும் எரிக்கக்கூடாது என தடை விதித்துள்ளது. எனவே டயர், ரப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்ட செயற்கை பொருட்கள் எரிக்ககூடாது. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் பண்டிகை திருநாளை புகை மற்றும் காற்று மாசின்றி கொண்டாடுவோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : festival ,
× RELATED திருமயம் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு