×

கிராம பகுதிகள் அதிகம் இருப்பதால் வாரச்சந்தை அமைக்க வேண்டும் தொண்டி மக்கள் வலியுறுத்தல்

தொண்டி, ஜன.13: தொண்டியை மையமாக வைத்து ஏராளமான கிராம பகுதிகள் இருப்பதால், தொண்டியில் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளந்து வரும் முக்கியமான பகுதியாகும். கடல்சார் தொழிலும் விவசாயமும் முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள மார்க்கெட்டிற்கு தினமும் மதுரையிலிருந்து காய்கறிகள் வருகிறது. நேரம் தவறி வருவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்லும் அரசு அலுவலர்களும் தின கூலியாளர்களும் தாங்கள் வேலைக்கு செல்லும் முன்பு காய்கறி வாங்க சிரமப்படுகின்றனர்.

மேலும் விலையும் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. சந்தையில் வாங்கும் காய்கறிகளின் விலை குறைவாக இருக்கும் என்பதாலும் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா கூறியது, தொண்டி பேரூராட்சியில் அரசுக்கு சொந்தமான இடங்கள் அதிகம் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இவ்வகையான இடங்களில் வாரச்சந்தை அமைக்கலாம். பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் வாரத்தில் ஒரு நாளும் திருவாடானை சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி வருகின்றனர்.

தொண்டியை சுற்றிலும் உள்ள மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதால் தொண்டியில் வாரச் சந்தை அமைவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள். வாரச்சந்தை அமைக்க வேண்டும் என பேருராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி பல வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் இதற்கான எந்த முயற்சியும் எடுக்க வில்லை என்றார்.

Tags : Volunteers ,areas ,
× RELATED 221 கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு