×

பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாக சஸ்பெண்ட்

திருச்சி, ஜன.13: திருச்சி மாநகராட்சியில் பொது வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டதாக கூறி துப்புரவு பணியாளர்கள் 17 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து நேற்று காந்தி மார்க்கெட் துப்புரவு பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கடந்த 8ம் தேதி பொது வேலைநிறுத்தம் நடந்தது. அதில் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடந்தன. இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தில் திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்டதாக கூறி, காந்தி மார்க்கெட்டில் துப்புரவு பணி மேற்கொள்ளும் 17 பேரை சஸ்பெண்ட் செய்ததாக கூறப்படுகிறது.

இதை கண்டித்தும், இவர்களுக்கு பணி வழங்க கோரியும் காந்தி மார்க்கெட் துப்புரவு பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் பணிகளை புறக்கணித்து மீண்டும் வேலை வழங்கிட கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில நேற்று காலை காந்தி மார்க்கெட் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் திருஞானம், தாசில்தார் மோகன், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா, செயலாளர் மணிமாறன் தலைமையில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

அதில் அதிகாரிகள் மறுபடியும் வேலை வழங்குவது பற்றி எங்களால் முடிவெடுக்க முடியாது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு உரிய கடிதம் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் தொழிலாளர்கள் அதுவரை வேலையின்றி எப்படி இருக்க முடியும் என கூறி, இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஒட்டு மொத்த தொழிலாளர் சார்பில் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து நாளை (இன்று) மாலைக்குள் உரிய அதிகாரிகளிடம் பேசி பதில் சொல்வதாக தெரிவித்தனர். அதுவரை யாரையும் புதிதாக வேலைக்கு சேர்க்க கூடாது. புதிதாக சேர்த்தால் தடுத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
மேலும் நாளை (இன்று) மாலைக்குள் பணிக்கு சேர்க்காவிட்டால் போராட்டத்தை தொடருவோம் என தொழிலாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : strike ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து