×

புதிய ரேசன் கடையில் பொங்கல் பரிசு வழங்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் மீனாட்சிபுரம் மக்கள் அறிவிப்பு

அலங்காநல்லூர், ஜன.13: அலங்காநல்லூர் அருகே அய்யூர் ஊராட்சியில் உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். இந்த ஊரில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு 150க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது. இங்குள்ள மக்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அய்யூர் கிராமத்திற்கு பல ஆண்டுகளாக வெயில் மழை காலத்தில் கூட நடந்து சென்று ரேசன் பொருள் வாங்க வேண்டிய அவலநிலையில் உள்ளத்தாக மீனாட்சிபுரம் கிராமத்தினர் கூறுகின்றனர்.
மேலும் இதுகுறித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆய்விற்கு வந்த கலெக்டரிடம் புகார் அளித்த பின்பு கிராம மக்கள் கூறியதாவது, எங்கள் கிராமத்திற்கு தனி ரேசன் கடை இல்லாமல் பல ஆண்டுகளாக பக்கத்து கிராமத்திற்கு சென்று வாரம் ஒரு நாள் மட்டும் நீண்டநேரம் காத்திருந்து அரிசி, பருப்பு வாங்கி வந்தோம்.

இந்நிலையில் கிராம மக்களின் தொடர் வேண்டுகோளுக்கு பின்னர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டது. இந்த கடையை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் திறந்து வைத்து ஓராண்டாகிய நிலையில் இன்று வரை புதிய கடையில் பொருள்கள் வழங்கவில்லை. தற்போது வரை அய்யூர் சென்று குடிமைபொருள் வாங்கி வருகிறோம். உடனடியாக திறக்கப்படும் என்று எம்.பி. ரவீந்திரநாத்குமார் மற்றும் எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோர் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி தந்தனர். ஆனால் இதுவரை இந்த ரேசன் கடை திறக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் தற்போது ஆளும் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல்காரணமாக சோழவந்தான் தொகுதியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கண்டுகொள்ளாத காரணத்தால்தான் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை மூடப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவுதுறை சார்ந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சியினரே புகார் தெரிவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. புதிய ரேசன் கடையில் பொங்கல் பரிசு பொருள்களை வழங்கவில்லை என்றால், சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மீனாட்சிபுரம் கிராமமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Meenakshipuram People ,Announcement ,Racine Shop ,
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...