×

திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.2.45 கோடியில் பூங்கா, இரவில் ஒளிரும் வண்ண விளக்குடன் போர் வீரர் நினைவுச்சின்னம் திறப்பு

திருச்சி, ஜன.13: திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.2 கோடி 45 லட்சத்தில் பூங்கா மற்றும் போர் வீரர் நினைவுச்சின்னம் ஒளிரும் வண்ண விளக்குகளுடன் அமைச்சர்கள் திறந்து வைத்தனர். திருச்சி மாநகராட்சி காந்தி மார்க்கெட்டில் முதலாம் உலக போர் நினைவுச்சின்னம் உள்ளது. இந்த போர் நினைவு சின்னத்தை சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் முதலாம் போரில் வீரர்களின் தியாகம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி கவனத்தை ஈர்க்க வைக்கும் விதமாக இரவில் மிளிரும் வகையில் நான்கு புறமும் வண்ண, வண்ண எல்இடி மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. இதனை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர்.

அதே போல் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் ரங்கம் கோட்டம் இ.பி.ரோடு லூர்துசாமி பிள்ளை பூங்கா அமைக்கப்பட்டது. அதில் பெரிய அளவு யோகா மைய கட்டிடம், இரட்டை ஷட்டில் காக் கோர்ட், குழந்தைகள் விளையாடும் களம், திறந்தவெளி உடற்பயிற்சியகம், ஜிம்னாஸ்டிக் ஹால், புல்தரை பசுமை இடங்கள், நடைபயிற்சி பாதை, கழிப்பறை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கிரானைட் கல் பெஞ்சுகள், மின் விளக்குகள் ஆகியவைகள் 38,676 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனையும் நேற்று அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதில் ஆணையர் சிவசுப்பிரமணியன், நகரப்பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் மற்றும் உதவி ஆணையர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : war veteran monument ,Trichy Corporation ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் போட்டி அமமுக...