×

பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாதம் தயாரிக்கும் இடத்தை மாற்ற வேண்டும்

மதுரை ஜன. 13:மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரசாதம் தயாரிக்கும் இடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.   மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோயிலுக்கு வருவது தற்போது அதிகரித்து உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள பிரசாத ஸ்டாலில் அப்பம், லட்டு, முருக்கு, பொங்கல், புளிச்சாதம் உள்ளிட்ட பிரசாத பொருட்களை வாங்கிச்செல்லுவது வழக்கம்.

இந்த பிரசாதம் யானை மடம் அருகே கோயில் மைய பகுதியில் தயாரிக்கப்பட்டு, கோயில் உள்பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தற்போது முழுக்க, முழுக்க காஸ் சிலிண்டரை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். நாளொன்றுக்கு வணிக சிலிண்டர்கள் 6க்கும் மேலாக பயன்படுத்தப்படுகிறது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இலவச லட்டு 30 கிராம் அளவில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் அங்குதான் தயாரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சூடான வெப்பநிலை காணப்படுகிறது. கடந்த மாதம் பிரசாதம் தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்த மத்திய பாதுகாப்பு படையினர் பிரசாதம் தயாரிக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என உத்தரவிட்டு சென்றனர்.

இதேபோல் தீயணைப்புத்துறையினரும் உள்ளே பிரசாதம் தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் நிர்வாகம் எந்த மாற்று இடமும் தயார் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளது. உடனடியாக மாற்று இடம் அமைக்க இந்து அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திரரெட்டிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 2018ம் ஆண்டு பிப்.2ம் தேதி தீவிபத்து ஏற்பட்டு வசந்தராயர் மண்டபம் மற்றும் கடைகள் எரிந்து சோதமடைந்தது. இதனால் ராஜகோபுர வாசல் மூடப்பட்டு 2 வருடம் ஆகிறது. இப்பகுதியில் உள்ள சுவாமிகளை தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை புதுப்பிக்க நிர்வாகம் ஒரு முயற்சியும் செய்யவில்லை. இந்நிலையில், தற்போது கோயில் மைய பகுதியில் சுமார் 18 மணி நேரம் தொடர்ந்து காஸ் சிலிண்டர் தீயில் பிரசாதம் தயாரித்து வருகின்றனர். இதனால் கோயில் பகுதியில் வெப்பம் ஏறிக்கொண்டு உள்ளது. எனவே, பிரசாதம் தயாரிக்க கோயில் சார்ந்த இடங்கள் பல உள்ளது. அங்கு மாற்றம் செய்து பிரசாதம் தயாரிக்க வேண்டும். இதற்கு அரசு உரிய உத்தரவு வழங்க வேண்டும்’ என்றார். 

Tags : pilgrims ,Meenakshiman ,
× RELATED மீனாட்சியம்மன் கோயிலில் காணிக்கை ரூ.96 லட்சம்