×

குடவாசல் - பாபநாசம் சாலையில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

வலங்கைமான், ஜன.13: வலங்கைமான் அடுத்த விருப்பாட்சிபுரம் பகுதியில் குடவாசல்-பாபநாசம் சாலையில் கடந்த 3 மாதமாக வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம் மற்றும் வழியோர கிராமங்கள் பயன்பெறும் விதமாக வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக இத்திட்டத்தில் வேதாரண்யம் பகுதிக்கு கும்பகோணம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து பாபநாசம்-வலங்கைமான் மற்றும் வலங்கைமான் - மன்னார்குடி சாலைவழியாக சாலையின் மையப்பரப்பில் இயந்திரத்தின் உதவியோடு பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. சாலையில் செல்லும் கனரக வாகனங்களால் இக்குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீனாவதும் அதை சரிசெய்வதும் தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் குடவாசல்-பாபநாசம் சாலையில் விருப்பாட்சிபுரம் பகுதியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக தண்ணீர் கால்வாய்போல் ஓடுகிறது. மேலும் அக்குடிநீர் அருகில் உள்ள இந்தியன் மார்க் பம்பினை சுற்றி குளம்போல் தேங்கி கழிவுநீர் குட்டைபோல் காட்சி அளிக்கிறது. அதன் காரணமாக குடிதண்ணீர் வீணாவதோடு தொற்று நோயும் பரவும் சூழ்நிலை உள்ளது. எனவே மேலும் காலதாமதம் செய்யாமல் குடிதண்ணீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Breakdown ,Vedaranyam ,road ,Kudavasal - Papanasam ,
× RELATED வேதாரண்யத்தில் 3 நாட்களாக மக்களை...