ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல் பட்டுக்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் கோரிக்கை

தஞ்சை, ஜன. 13: தஞ்சை கலெக்டருக்கு பட்டுக்கோட்டை ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக ஒன்றிய இளைஞரணி செயலாளர் குணசுந்தர் கோரிக்கை மனு அனுப்பினார். அதில் பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்குள் 74 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். 21,174 குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து தினமும் 30 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. விடுமுறை மற்றும் பண்டிகை தினத்தில் கூடுதலாக சேகரமாகும். இங்கு அரசால் நிரந்தரமாக பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் 104 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக சுய உதவிக்குழு ஒப்பந்த தொழிலாளர்களாக 94 பேரும் பணிபுரிகின்றனர்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி நடந்த தேசிய துப்புரவு ஆணையத்தின் உறுப்பினர் தலைமையிலான கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட துப்புரவு தொழிலாளர்களின் பணி நிரந்தரம், வீடு அற்றவர்களுக்கு வீடு, சுகாதாரம், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட கோரிக்கைகள் கிடப்பில் கிடக்கிறது. குப்பை சேகரிப்பு மற்றும் குப்பை அள்ளுவதற்கு 250 வீடுகளுக்கு 3 தொழிலாளர்கள் என நியமிக்க வேண்டுமென விதி உள்ளது. ஆனால் இவர்கள் இயந்திரத்தை விட மிக மோசமான முறையில் கூடுதல் நேரங்களில் பணியாற்றி வருகின்றனர்.

நாடு அபார வளர்ச்சியடைந்து வருகிறது என சொல்லி வரும் வேளையில் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவல நிலை இன்றும் நீடிக்கிறது. மனிதனின் எந்தவொரு உழைப்பும், தொழிலும் இந்தியாவின் அரசியல் அமைப்பில் மரியாதைக்குரியது. அந்த வகையில் தமிழக அரசு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்ததை போல் நமது மாநிலத்தின் சுகாதாரத்தை பேணி காக்கும் தூய்மை துப்புரவு பணியாளர்களுக்கு 2 மாத ஊதியத்தை பொங்கல் போனசாக அறிவித்து வழங்க வேண்டும். அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Pudukkottai Municipal Sanitation Employees Pongal Bonus ,
× RELATED அரசு பஸ்களை முறையாக பராமரித்து இயக்க...