புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கலுக்காக மண் பானை தயாரிக்கும் பணி தீவிரம்

புதுக்கோட்டை, ஜன.13: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கலுக்காக பானை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் பொங்கல் திருநாள்தான் தமிழ் கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவும், விவசாயிகளின் உழைப்பின் மேன்மையை உணர்த்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மண் பானைகளில் பொங்கல் வைப்பது வழக்கம். கிராமங்கள் முதல் நகரங்களில் வரை இன்னும் நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மண் பானை முதல் பித்தளை பானை வரை பயன்படுத்தி பொங்கலிட்டு சூரியனை வழிபடுவர். பெரும்பாலும் கிராமப்புற மக்கள் மண் பானையையே பொங்கலுக்கு பயன்படுத்துகின்றனர்.

இதனால் பொங்கல் வந்தால் மண்பானைகளுக்கான தேவை அதிகரித்துவிடும். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, அன்னவாசல் சுற்றியுள்ள பகுதிகளான வாதிரிப்பட்டி, திருவேங்கைவாசல், புல்வயல், இடையப்பட்டி, புங்கினிபட்டி, குடுமியான்மலை, பொய்கால்பட்டி, தாண்றீஸ்வரம், உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களிமண்களை பதப்படுத்தி, பானைகள் தயாரித்து உலர வைக்கின்றனர். பின்பு சூளை அமைத்து, சுட வைத்து, தண்ணீர் பட்டாலும் சேதமடையாதவாறு தயார் படுத்தும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலை நுணுக்கத்துடனும் பல்வேறு வடிவங்களிலும் மண்பானைகள் தயார் செய்யப்படுவதால் இது தமிழக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. பானைகள் தவிர தண்ணீர் தொட்டிகள் மண் அடுப்புகள், சட்டிகள் உள்ளிட்டவையும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதனை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் மொத்தமாகவும் வாங்கி செல்கின்றனர்.

Tags : Introduction ,Pongal ,Pudukkottai district ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...