×

கங்காணிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா

பொன்னமராவதி,ஜன.13: பொன்னமராவதி அருகே உள்ள கங்காணிபட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கங்காணிபட்டியில் மரமும், மனிதனும் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியின் தலைமையாசிரியர் புவியரசு வாழ்த்துரை வழங்கினார். இதுபற்றி மரமும் மனிதனும் அமைப்பின் நிறுவனரும், மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியின் தமிழாசிரியருமான முகம்மது ஆஸிம் கூறியதாவது: பூமியை பசுமையாக்க வேண்டும் என்ற உயர் சிந்தனையில் வார்ப்பட்டு அம்பேத்கர் காலனியில் 2019 ஜனவரி 12ம் தேதி தொடங்கப்பட்ட மரமும் மனிதனும் அமைப்பின் மூலம் பள்ளிக்கூடங்கள், ஊருணிகள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பொது இடங்களில் 450 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

அத்துடன் வார்ப்பட்டு அதன் சுற்று வட்டாரப்பகுதி ஊர் பொதுமக்கள், 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள், கபடி வீரர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு 400 மரக்கன்றுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டு தங்களின் வீடுகள் மற்றும் விளைநிலங்களில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகின்றனர்.

மேலும் அமைப்பின் மூலம் கங்காணிபட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, கோயில் மற்றும் ஊருணியில் ஆலமரம், அரசமரம், மகிழம்பூ, புங்கை, வேம்பு, அத்தி உள்ளிட்ட 31 மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணாக்கர்களுக்கு தேக்கு, மகாகனி, நெல்லி, செம்மரம் உள்ளிட்ட 70 மரக்கன்றுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டு மரம் வளர்ப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இவ்விழாவில் ஊர் அம்பலம் ஆறுமுகம், மறவாமதுரை ஊராட்சி செயலர் குரலோவியர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆண்டிச்சாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா, வார்டு உறுப்பினர் மல்லிகா மற்றும் ஊர்ப்பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கங்காணிபட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியின் தலைமையாசிரியர் தேவேந்திரன் வரவேற்றார். முடிவில் பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவி பகவதி நன்றி கூறினார்.

Tags : tree planting ceremony ,Gangani Patta Panchayat Union Primary School ,
× RELATED 75வது சுதந்திர தினத்தையொட்டி சந்தோஷி கல்லூரியில் மரம் நடும் விழா