×

மாணவர்களுக்கு ஒழுக்கம், தூய்மை குறித்து தெளிவான சிந்தனை ஏற்படுத்த வேண்டும்


காரைக்கால், ஜன.13: பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒழுக்கம், தூய்மை குறித்து தெளிவான சிந்தனை ஏற்படச் செய்யவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரி குழந்தைகள் உரிமை ஆணையத்தின் சார்பில், பரிக்ஷா பர்வ் மற்றும் குழந்தைகள் உரிமை என்ற திட்டத்தின்கீழ், மாவட்ட நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாகத்தினருக்கும் என தனித்தனியே பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில், காரைக்கால் அரசு மற்றும் தனியார் பள்ளியின் முதல்வர், துணை முதல்வர், தலைமையாசிரியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா பேசியதாவது:

தற்போதைய நிலையில். மாணவர்கள் கல்வியிலும், பிற நிலைகளிலும் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகரித்து வருகிறது. காலப்போக்கில் இது அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. எனவே, அதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்தவேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் படிப்பு, மதிப்பெண் என்பதை மட்டுமே பார்த்து ஊக்கப்படுத்துகிறது. இது ஒரு வகையில் ஏற்புடையதாக இருந்தாலும், மாணவர்களிடையே புதைந்திருக்கும் மாற்றுத் திறன்களை மேம்படுத்து வகையில் பள்ளி நிர்வாகம் போதிய அளவில் ஈடுபடுவதில்லை. அதனால், இனி வரும் காலங்களில் மாணவர்களிடம் என்னென்ன திறமைகள் மறைந்து இருக்கிறது என்பதை கண்டறியவேண்டும். அதற்கேற்ப அவர்களை தயார்படுத்தவேண்டும்.

குறிப்பாக, பள்ளிகளிலேயே மாணவர்கள் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பயன்படுத்துவதாக புகார்கள் வருகிறது. வீட்டில் மாணவர்கள் தவறு செய்யவில்லை, பள்ளியில் தவறு செய்கிறார்கள் என்றால், பள்ளியில் கண்காணிப்பு, கட்டமைப்பு சரியில்லை என்றே பொருள். எனவே, மாணவர்களுக்கு ஒழுக்கம், தூய்மை குறித்து தெளிவான சிந்தனை ஏற்படச் செய்யவேண்டும். மேலும், பல பள்ளி, கல்லூரிகளில் கழிவறை தூய்மை இல்லை. மாணவர்கள், ஆசிரியர்களுக்கென தனித்தனி கழிவறை இருக்கக்கூடாது. ஒரே கழிவறையை பயன்படுத்தினால்தான், அதன் தூய்மை தெரியவரும் என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஷ், யூனியன் பிரதேச குழந்தைகள் உரிமை ஆணையத் தலைவி தேவிப்பிரியா, அவ்வையார் கல்லூரி முதல்வர் பாலாஜி, மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் கோவிந்தராஜன், மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமணபதி உள்ளிட்ட பல கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...