×

மீனவ சமுதாய மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது

நாகை, ஜன.13: மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். நாகை மாவட்டம் நாகூர் சம்பாதோட்டம், செல்லூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 462 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரவீன்பிநாயர் தலைமை வகித்தார். வீட்டு மனைப்பட்டாக்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:
நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா தமிழக அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மீனவ சமுதாய மக்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீனவ சமுதாய மக்களின் மேல் முழுமையாக அதிமுக அக்கரை கொண்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்யவும் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

நாகூர் பட்டினச்சேரி கிராமதில் சம்பாத்தோட்டம் பகுதியில் மாதா அமிர்தானந்தமயி தொண்டு நிறுவனத்தால் மொத்தம் 640 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
மேலும் அரசு புஞ்சை நிலத்தில் குடியிருக்கும் 111 குடும்பங்களுக்கும், தனியார் பட்டா நிலங்களில் வீடுகட்டித் தரப்பட்டு குடியிருக்கும் 73 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டித் தரப்பட்டு குடியிருக்கும் 215 குடும்பங்களுக்கு பட்டா வழங்கிட அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகை அருகே செல்லூர் கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 799 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அவற்றில் 300 நபர்களுக்கு ஏற்கனவே பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

விழாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களில் நாகூர் -சம்பா தோட்டம் பகுதியைச் சேர்ந்த 241 பயனாளிகளுக்கும், செல்லூர் கிராமத்தில் 221 பயனாளிகளுக்கும் என மொத்தம் 462 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 40 மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுள்ளது என்றார். டிஆர்ஓ இந்துமதி, நாகை ஆர்டிஓ பழனிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : government ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...