×

காசநோய் அதிகமாக உள்ள இடங்களை கண்டறிந்து ஜிஐஎஸ் முறையில் வரைபடம்: மாநகராட்சி தகவல்

சென்னை: காசநோய் இல்லா சென்னையை உருவாக்க தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரீச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து “காசநோய் இல்லா சென்னை” என்ற திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி சென்னையில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், காசநோய் பாதித்த பொதுமக்களை கண்டறிந்து முறையான சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.  இதுதவிர மொபைல் டிபி வேன் திட்டமும் செயல்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் காசநோய் பாதிப்பு உள்ள இடங்களை கண்டறிந்து ஜிஐஎஸ் முறையில் வரைபடம் தயாரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் காநோய் அதிகம் உள்ள இடங்களை கண்டறியவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது போதை மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். இதைத்தவிர்த்து ஏற்கனவே அந்தப்பகுதியில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன் அடிப்படையில் காசநோய் அதிக பாதிப்பு ஏற்படும் மற்றும் அதிக பாதிப்பு ஏற்பட்ட இடங்களை இணைத்து ஜிஐஎஸ் முறையில் இணைத்து வரைபடம் தயாரிக்கப்படும். இந்த வரைபடத்தின் மூலம் அந்த இடங்களில் காசநோயை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : GIS ,
× RELATED சென்னையில் வீட்டு தனிமையில்...