×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மேலும் இரண்டு உணர்வு பூங்கா: மாநகராட்சி திட்டம்

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேலும் 2 உணர்வு பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா தேனாம்பேட்டை மண்டலம், 126வது வார்டில் உள்ள சாந்தோம் பிரதான சாலையில் செயல்பட்டு வருகிறது.

15,000 சதுர அடி பரப்பளவில் ரூ.1.36 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்தப் பூங்காவில் குழந்தைகள் விளையாட்டு மைதானம், பலவித வாசனை உணர்வுகள் கொண்ட ஹெர்பல் கார்டன், கூடைப்பந்து மைதானம், 8 நடை பாதைகள், பாரம்பரிய விளையாட்டுகள் கொண்ட விளையாட்டு மேடை, மணல் மேடை, படம் வரைவதற்கான சுவர், ஜிம், ஸ்டெப்பிங் ஸ்டேன், ஊஞ்சல், சறுக்குமரம், ராட்டினம், சீசா, ஓய்வறை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பூங்கா மாற்றுத்திறனாளிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இதுபோன்ற பூங்காவை சென்னையில் பல்வேறு இடங்களில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையில் மேலும் 2 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதன்படி வளசரவாக்கம் சக்தி நகர் மெயின் சாலை மற்றும் கோட்டூர் கார்டன் முதல் குறுக்கு தெரு ஆகிய இடங்களில் இந்த பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. வளசரவாக்கம் பூங்கா ரூ.1.62 கோடி மதிப்பீட்டிலும், கோட்டூர் கார்டன் பூங்கா ரூ.1.85 கோடி மதிப்பீட்டிலும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. சாந்தோமில் அமைக்கப்பட்டுள்ள உணர்வு பூங்கா ஸ்மார்ட் சிட்டி கவுன்சில் விருது மற்றும் தமிழக அரசு நல் ஆளுமை விருது ஆகியவற்றை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : parks ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகையின்றி பூங்காக்கள் வெறிச்சோடியது