×

தார் கலவையை பெயர்த்து எடுத்த நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை சீரமைப்பு பணி: விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்

பெரம்பூர்: எருக்கஞ்சேரி - மூலக்கடை சாலையை சீரமைக்க, பழைய தார் கலவையை பெயர்த்து எடுத்த நிலையில், சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சென்னை மாநகராட்சி 6வது மண்டலத்திற்கு உட்பட்ட எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், அம்பேத்கர் கலைக் கல்லூரி முதல், மூலக்கடை வரை இச்சாலை சிதிலமடைந்து காணப்பட்டது.

இதையடுத்து, இந்த பகுதி சாலையை சீரமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கா, கடந்த சில நாட்களுக்கு முன், இயந்திரம் மூலம் பழைய தார் கலவை பெயர்த்து எடுக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, அந்த சாலை முழுவதும் ஜல்லி கற்கள் சிதறிக் கிடக்கின்றன.

வழக்கமாக, சாலை அமைப்பதற்கு முன், பழைய தார் கலவையை சுரண்டுவது வழக்கம். அப்படி சுரண்டிய ஓரிரு தினங்களில் மீண்டும் புதிய சாலை  போட வேண்டும். ஏனென்றால் சுரண்டப்பட்ட சாலையில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிகமாக நிலை தடுமாறி கீழே விழுந்து உயிர்பலியான சம்பவங்கள் சென்னையில் அதிகம் உண்டு. ஆனால் அப்படிப்பட்ட சம்பவங்களில் இருந்தும் பாடம் கற்காத அதிகாரிகள் சாலையை சுரண்டிவிட்டு பல நாட்கள் கழித்து மெத்தனமாக சாலையை போடுகின்றனர்.
 
இதனால், தினமும் அந்த வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடக்க பெரிதும் அச்சப்படுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரிதும் சிரமப்பட்டு செல்கின்றனர். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் இருசக்கர வாகனங்களில்  செல்வோர் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சீரமைத்து பொதுமக்கள் அச்சமின்றி இந்த சாலையை பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : panic ,motorists ,
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!