×

கொடுக்கல் வாங்கல் தகராறு வாலிபர் கொலை வழக்கில் போலி நிருபர் கைது

திருப்பூர், ஜன.13: திருப்பூரில் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலி நிருபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கோல்டன் நகரை அடுத்த பவானி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (37). இவர் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன் அதே பகுதியை சேர்ந்த பாத்திமா கனி என்பவரிடம் சுரேஷ் ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். பல நாட்கள் கழித்து அந்த பணத்தை பாத்திமா கனி சுரேசிடம் திருப்பி கேட்டதற்கு தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. சம்பவத்தை பாத்திமா கனி தனது அக்காவின் கணவரான அப்துல் காதரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி அப்துல் காதரும் (45) அவரின் நண்பரான நாகராஜ் (40) மேலும் சிலர் சேர்ந்து இது குறித்து சுரேசிடம் பணத்தை திருப்பிக் கேட்டு இரும்பு பைப், கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சுரேஷ் தனது வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  சாகுல் அமீது என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அப்துல் காதர், மற்றும் அவரது நண்பர்களான நாகராஜ் ஆகியோர் ஆரணி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சேட் ரூபைதீன் (36) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் பல பத்திரிகைகளின் நிருபர் அடையாள அட்டைகளை வைத்திருந்தது தெரியவந்தது. பத்திரிகையாளர் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags : correspondent ,
× RELATED ஆசிரியர்கள் வாழ்வாதாரமும்...