×

பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்களுக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் திறப்பு

திருப்பூர்,ஜன.1:3திருப்பூர் மாநகர போலீஸ் சார்பில் பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு அது குறித்த அறிவிப்பு பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகைக்காக தங்களது சொந்த மாவட்டங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக மாநகரில் தற்காலிகமாக பேருந்து நிறுத்தம் அமைத்தும், சில இடங்களில் வழித்தடங்கள் மாற்றியும் அமைத்துள்ளனர்.

திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் அங்கேரிபாளையம் ரோடு சிவன் தியேட்டர் வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு கரூர், திருச்சி, மன்னார்குடி, அறந்தாங்கி, ஜெயங்கொண்டம், சிதம்பரம், பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள் இந்த பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் பயணிக்கலாம். அதே போல் மதுரை, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் வழக்கமாக புதிய பேருந்து நிலையத்திலேயே செயல்படும் மதுரை, தேனி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் இந்த பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கலாம். கோவை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பழைய வடக்கு வட்டார அலுவலக மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கோவை, மேட்டுப்பாளையம், நீலகிரி, கோத்தகிரி ஆகிய ஊர்களுக்கு பயணிப்பவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஈரோடு-சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளியே வரும் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஈரோடு சேலம் மார்க்கமாக சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவுருத்தியிருந்தனர். இது குறித்த அறிவிப்பு  பலகைகளை பொதுமக்களின் பார்வைக்கு படும்படியாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொங்க விடப்பட்டுள்ளது.ரயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம்:
தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். சிலர் மேற்கல்வியும் படித்து வருகின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் தங்களது சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  

இதற்காக, 60 நாட்களுக்கு முன்னரே பஸ், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து சொந்த ஊர் சென்று திரும்புவது வழக்கம். இதனால், ரயில் மற்றும் பஸ்களில் முன்பதிவு தொடங்கிய அன்றே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தது. நாளைமறுநாள் (15ம் தேதி) தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கும் தொடர்ந்து ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் பணிபுரியக் கூடிய தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இரண்டு நாட்களுக்கு முன்பே கிளம்புவார்கள்.

இந்நிலையில், நேற்று சொந்த ஊர் செல்வதற்காக குவிந்த பனியன் தொழிலாளர்களால் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.  பொங்கலுக்கு எப்படியாவது சொந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என கடும் நெரிசலையும் பொருட்படுத்தாமல் பஸ், ரயில்களில் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனால் பஸ், ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட இரண்டு மடங்கு கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமான பயணிகள் ரயில் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதனால், பல பொதுமக்கள் கூட்ட நெரிசலில் தங்கள் உடமைகளை வைத்து கொண்டு ரயிலில் ஏறமுடியாமல் தவித்தனர்.முக்கிய பண்டிகை நாட்களில் டிக்கெட் ரிசர்வேசன் செய்வதற்கும், கூட்ட நெரிசலை கட்டுபடுத்த வரிசைப்படுத்தி விடுவது போன்ற நடவடிக்கைகளை ரயில்வ போலீசார் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : Opening ,Bus Stations ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு