×

மாவட்டத்தில் கடும் உறைபனி பொழிவு கருகி வரும் தேயிலை செடிகள்

ஊட்டி, ஜன. 13:நீலகிாி மாவட்டத்தில் உறைப்பனி பொழிவு தீவிரம் காட்டி வரும் நிலையில் தேயிலை செடிகள் கருக துவங்கியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நீலகி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக உறைபனி பொழிவு இருந்து வருகிறது. இதில் தாவரவியல் பூங்கா, குதிரைபந்தய மைதானம், தலைகுந்தா, சூட்டிங் மட்டம் போன்ற பகுதிகளில் உள்ள புல் மைதானங்களில் உறைபனி கொட்டுகிறது. மாலை, இரவு, அதிகாலை நேரங்களில் உறைபனி பொழிவு காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது. நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகபட்ச வெப்ப நிலையில் 9 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது.

உறைபனி பொழிவு காரணமாக புற்கள், செடி கொடிகள் கருகி காய்ந்துள்ளன. கடந்த ஆண்டு பெய்த பருவமழைகளால் தேயிலை செடிகள் இலைகள் வளா்ச்சியடைந்து வந்த நிலையில், தற்போது உறைபனியால் மாவட்டத்தில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள தேயிலை செடிகள் கருக துவங்கியுள்ளன. நடுவட்டம், சோலூர், ஊட்டி, கரும்பாலம், ேசலாஸ், காட்டேரி, எல்லநள்ளி, மஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தேயிலை கருகி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் விவசாயிகள் தங்கள் தேயிலை தோட்டங்களில் செடிகளை கவாத்து செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதேபோல் சில தாழ்வான பகுதிகளில் காய்கறி தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறி செடிகளும் கருக துவங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags : Tea plants ,district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்