×

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 7 நாள் விடுமுறை

சோமனூர், ஜன.13: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சோமனூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விசைத்தறியாளர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு லட்சம் சாதாரண விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இதில், தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதால் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி இயக்குவதற்காக மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, உசிலம்பட்டி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறியை இயக்கி வருகின்றனர். தென்மாவட்டங்களில் தை திருநாள் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காப்புக்கட்டுதல், போகிப் பண்டிகை ஏறு தழுவுதல், பொங்கல் வைத்தல், பூப்பறித்தல்,  சிலம்பாட்டம், காவடிஆட்டம், ஒயிலாட்டம், பறை ஆட்டம், ஜல்லிக்கட்டு, கபடிபோட்டி நடக்கிறது. இவை ஒரு வாரம் நடைபெறுவதால் விசைத்தறி தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.இதனால் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்துள்ளனர். நேற்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் 20ம் தேதிக்கு மேல் விசைத்தறி இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...