×

பொங்கல் விடுமுறையையொட்டி சொந்த ஊர் செல்ல ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம்

கோவை, ஜன.13: பொங்கல் பண்டிகைக்கு தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் கோவை ரயில் நிலையம், ேபருந்து நிலையங்களில் நேற்று குவிந்தனர். கோவை மாவட்டத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளும் கோவையில் தங்கி படித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும் நிலையில், பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொங்கல் விடுமுறை முன்னிட்டு நேற்று முதல் ஏராளமானோர் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல கோவை ரயில் நிலையத்தில் குவிந்தனர். டிக்கெட் கவுன்டரில் நீண்ட தூரம் வரிசையில் நின்று டிக்கெட் பெற்றனர். ரயில்களில் கூட்டம் அதிகளவில் இருந்தது.

கோவை ரயில் நிலையம் நேற்று பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதே போல், காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் அதிகளவில் கூட்டம் இருந்தது.

சிறப்பு பேருந்துகள் இயக்க கோரிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சோமனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் வசித்து வருகின்றனர். இவர்கள் விழா காலங்களில் குறிப்பாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.ஆனால், தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குறிப்பாக தேனி, திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை, ராமநாதபுரம், மதுரை, உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்வதற்கு சோமனூரில் இருந்து பேருந்துகள் இல்லை.

இவர்கள் திருப்பூர் பேருந்து நிலையம் அல்லது கோவையில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சென்றுதான் பேருந்தை பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, சோமனூரில் இருந்து காரணம்பேட்டை வரை ஆட்டோக்களில் செல்வதற்கு இரவு நேரங்களில் ரூபாய் 150 வசூலிக்கின்றனர். இதுவே காரணம்பேட்டையில் இருந்து மதுரைக்கு பேருந்தில் செல்வதற்கு கட்டணம் ரூ150தான் என்பதால் சோமனூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Travelers ,holiday home ,train station ,Pongal ,
× RELATED வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில்...