×

பதவிகளை பறித்துக்கொண்டது புறநகர் மாவட்டம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கொதிப்பு

ஈரோடு, ஜன. 13:  ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பெரிய பதவிகள் அனைத்தையும் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர் பறித்துக்கொண்டதால், மாநகர மாவட்ட அ.தி.மு.க.வினர் கடும் கொதிப்பில் உள்ளனர்.
 ஈரோடு மாவட்டத்தில் மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக ஈரோடு எம்.எல்.ஏ. ராமலிங்கம் உள்ளார். இதே போல புறநகர் மாவட்ட செயலாளராக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் உள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில்  மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய இரண்டு பதவிகளையும் புறநகர் பகுதியை சேர்ந்தவர்களே எடுத்துக்கொண்டனர். அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமியின் மனைவி நவமணிக்கு தலைவர் பதவியும், கூட்டணி கட்சியை சேர்ந்த அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பா.ம.க. கவுன்சிலர் வேலுசாமிக்கு மாவட்ட துணை தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.

இந்த இரண்டு பதவிகளில் ஒன்றை மாநகர மாவட்டத்தில் கவுன்சிலர்களுக்கு வழங்க வேண்டும் என்று மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் வலியுறுத்தி வந்த போதிலும் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணனின் ஆதிக்கத்தால் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.வினருக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கட்சி தொண்டர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அ.தி.மு.க தொண்டர்கள் கூறியதாவது: ஈரோடு மாநகர மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்ரமணியம் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் 2 அமைச்சர்களின் ஆதிக்கத்தை தாண்டி செயல்பட முடியாத நிலை இருந்து வருகிறது. கடந்தாண்டு நடந்த மக்களவை தேர்தலில் அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டது.

இதே போல கூட்டுறவு தேர்தலிலும் மாவட்ட அளவில் முக்கிய பதவிகளை புறநகர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளரான கோபி காளியப்பனுக்கு ஈரோடு ஆவின் சேர்மன் பதவியும், கருப்பணன் ஆதரவாளரான பவானி கிருஷ்ணராஜூக்கு ஈரோடு மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. தற்போது நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலும் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியானது புறநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கவுன்சிலர்கள் இருந்தும் அதை புறக்கணித்துவிட்டு புறநகர் பகுதிகளுக்கு மட்டுமே பதவிகளை கொடுத்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் மாநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க வளர வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இவ்வாறு கூறினர்.

Tags : Suburban District Municipal District ,AIADMK Executives ,
× RELATED அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்