விழுப்புரம் மாவட்டத்தில் 5,514 பேர் எழுதினர்

விழுப்புரம், ஜன. 13:  தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமத்தால் காவல்துறையில் காலியாக உள்ள சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை, பட்டாலியன் ஆகிய பிரிவில் 969 எஸ்.ஐக்கள் பணியிடம் அறிவிக்கப்பட்டது. விண்ணப்பித்த பொதுப்பிரிவினருக்கான எழுத்துத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் நடந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 1,168 பெண்கள் உள்ளிட்ட 7,081 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். மொத்தம் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விழுப்புரம் ஏழுமலை தொழில்நுட்பக் கல்லூரி, கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலைப்பள்ளி, அரசூர் விஆர்எஸ் பொறியியல் கல்லூரி, விஆர்பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு நடந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 326 பெண்கள், 1,241 ஆண்கள் உள்ளிட்ட 1,567 பேர் கலந்து கொள்ளவில்லை. 5,514 பேர் மட்டும் தேர்வில் கலந்து கொண்டு எழுதினர்.

தேர்வுக்கு காலை 8 மணிக்கே தேர்வர்கள் ஆஜரானார்கள். அதன்படி காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி 12.30 மணி வரை நடந்தது. தேர்வு மையங்களில் தமிழக காவல்துறை ஐ.ஜி. (பொது) கணேசமூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். தேர்வாளர்களின் ஹால்டிக்கெட்டுகளை வாங்கி சரிபார்த்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எந்தவித முறைகேடுகளின்றி தேர்வு நடைபெறுகிறது. தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இடைத்தரகர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என்று கூறினார். இதனிடையே அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் அரசூர், கப்பியாம்புலியூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், ஒரு கூடுதல் எஸ்.பி., 5 டிஎஸ்பிக்கள், 29 இன்ஸ்பெக்டர், 88 எஸ்.ஐக்கள், 700 போலீசார், 3 நிர்வாக அதிகாரிகள், 56 அமைச்சுப்பணியாளர்கள் தேர்வு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Villupuram ,district ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் ₹2.70 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்