×

வடகரை, வெண்கரும்பூர் ஊராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

விருத்தாசலம், ஜன. 13: கடலூர் மாவட்டத்தில் வடகரை, வெண்கரும்பூர் ஊராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வடகரை ஊராட்சி தேர்தலில் தலைவர் மற்றும் 6 வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். நேற்றுமுன்தினம் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜோதி தலைமையில் நடந்தது. அப்போது வார்டு உறுப்பினர்கள் சம்பத், ராஜலட்சுமி, இந்திராகாந்தி, தனலட்சுமி, சிந்தனைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ராஜலட்சுமி துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் உறுப்பினர்கள் தனலட்சுமி, சிந்தனைச்செல்வி இருவரும் ராஜலட்சுமி துணைத் தலைவர் ஆவதற்கு வாக்களிக்க முடியாது என வெளிப்படையாக தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் வீரசெல்வி ஆகிய இருவரும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வராததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது. இதையடுத்து துணை தலைவர் மறைமுக தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதேபோல், வெண்கரும்பூர் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. துணை தலைவர் பதவிக்கு தனுஷ்கோடி, இளவரசி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஊராட்சி தலைவர் ஆதரவுடன் ஒருதரப்பில் 5 உறுப்பினர்களும், மற்றொரு தரப்பில் 5 உறுப்பினர்களும் இடம் பெற்றனர். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் மறுதேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.சவுந்திரசோழபுரம் ஊராட்சியில் துணைத்தலைவர் பதவிக்கு உறுப்பினர்கள் சிவா, துர்காதேவி போட்டியிட்டனர். மறைமுக தேர்தலில் தலைவர் மற்றும் 9 வார்டு உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் இருவருக்கும் தலா 5 ஓட்டுகள் விழுந்ததாக தேர்தல் நடத்தும் அதிகாரி செல்வராஜ் தெரிவித்தார். இதனால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் துர்காதேவி வெற்றி பெற்றார்.

Tags : Vadakarai ,Venkarambur ,election ,
× RELATED மகனுக்காக இன்னும் பிரசாரம் செய்யல… பீல் பண்ணும் பிரேமலதா