×

பயிர் காப்பீடு இழப்பீடு தொகைக்கு நிதி ஒதுக்கீடு: கோவில்பட்டியில் ஆர்டிஓவை சந்தித்து விவசாயிகள் நன்றி தெரிவிப்பு

கோவில்பட்டி, ஜன.13: பயிர் காப்பீடு இழப்பீடு தொகைக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழகஅரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவில்பட்டியில் ஆர்டிஓவை சந்தித்து விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018-19ம் ஆண்டில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கயத்தாறு ஆகிய வட்டாரங்களில் உள்ள கிராம விவசாயிகள் தங்களது மானாவாரி நிலங்களில் பயிரிட்டிருந்த மக்காச்சோளம் பயிர்கள் அமெரிக்க படைப்புழு தாக்குதலால் பாதிப்படைந்தது. இதேபோல் உளுந்து, பாசிப்பயறு, வெங்காயம், கொத்தமல்லி போன்ற மானாவாரி பயிர்களும் போதிய மழையின்றியும், நோய் தாக்குதலாலும் பாதிப்பிற்குள்ளாகியது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கக்கோரி பயிர் காப்பீடு இழப்பீடு பெறுவதற்கான பிரிமிய தொகையினை செலுத்தினர்.

 இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பிரிமியம் தொகை கட்டிய விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்குவதற்காக மொத்தம் ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக 44 கோடியே 88 லட்சத்தை அரசு விடுவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த தொகை மூலம் மாவட்டத்தில் 32 ஆயிரத்து 455 விவசாயிகள் பயன்பெறுகின்றனர். விரைவில் 2வது கட்டமாக 80 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயிர் காப்பீடு இழப்பீடு தொகைக்கான நிதி ஒதுக்கீடு செய்து வழங்க உத்தரவிட்ட தமிழக அரசிற்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் வகையில் கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் விவசாயிகள் ஆதிமூலம், நவநீதகிருஷ்ணன், சுப்புராஜ், வக்கீல் செந்தாமரைகண்ணன் மற்றும் ஏராளமான விவசாயிகள், கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று, ஆர்டிஓ விஜயாவிற்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். அப்போது கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Tags :
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு