×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்

திருச்செந்தூர், ஜன.13: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூரில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அதேநேரத்தில் கடற்கரை மற்றும் கோயில் வளாகத்தில் சுற்றிதிரியும் நாய்களால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டு மின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் திருவிழா களைகட்டும். எழில் கொஞ்சும் கடற்கரையுடன் கோயில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா வந்தும் பொழுதை கழிப்பார்கள். தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில், விருதுநகர், நாகர்கோவில், செங்கோட்டை, வள்ளியூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவை தவிர மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியம்மன் கோயில், சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் உள்ளிட்டவைகளுக்கு செல்பவர்களும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இதனால் கோயில் மற்றும் கடற்கரை பகுதிகளில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

கோயில் நகரம் என பெயர் பெற்ற திருச்செந்தூர், சமீபகாலமாக சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கி காணப்படுகிறது. கோயிலை சுற்றி ஆங்காங்கே குப்பை கூழங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை தவிர திருச்செந்தூரில் அனைத்து தெருக்களிலும், கடற்கரை மற்றும் கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான நாய்கள் சுற்றி திரிகின்றன. அவைகள் கூட்டம், கூட்டமாக திரிவதுடன் அவ்வப்போது ஒன்றுக்கொன்று குரைத்து சண்டை போடுவதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.  குறிப்பாக காலை, மாலை நேரங்களில் கடற்கரை பகுதியில் நாய்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் கடற்கரையில் சிறுகுழந்தைகளுடன் பொழுதை கழிப்பவர்கள், நாய்கள் கூட்டத்தை கண்டதும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுகின்றனர். மேலும் நாய்கள் சண்டையிடும் போது அவ்வழியாக செல்பவர்களையும் ஆக்ரோஷத்தில் கடித்து குதறி விடுகின்றன. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த திருச்செந்தூர் பேரூராட்சி மற்றும் திருக்கோயில் நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Devotees ,Thiruchendur ,Pongal ,
× RELATED திருச்செந்தூரில் 2வது நாளாக அலைமோதும்...