×

களியக்காவிளை எஸ்ஐ சுட்டுக்கொலை வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு மாறுகிறது: ஐந்துநாளாகியும் கொலையாளிகளை நெருங்க முடியவில்லை

நாகர்கோவில், ஜன.13:  களியக்காவிளை சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஐந்து நாட்களாகியும் போலீசாரால் குற்றவாளிகளை நெருங்க முடியவில்லை. இதற்கிடையே வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு விரைவில் மாற்றப்படும் என்றுகூறப்படுகிறது. களியக்காவிளை சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வருகின்ற அப்துல் சமீம் மற்றும் தவுபிக் இருவரும் தமிழ்நாட்டை மையமாக கொண்டு செயல்படுகின்ற தமிழ்நாடு நேஷனல் லீக் என்ற அமைப்பின் பிரதிநிதிகள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அண்மையில் டெல்லி மற்றும் பெங்களூருவில்  கைது செய்யப்பட்ட 6 பேர் இதே குழுவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாடு முழுவதும் தீவிரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாக காஜா மைதீன்(52), அப்துல்சமது(28), செய்யது அலி நவாஸ்(32) ஆகிய 3 ஐஎஸ் தொடர்புள்ள தீவிரவாதிகள் கடந்த 9ம் தேதி காலை  டெல்லியில் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் செய்யது அலி நவாஸ் குமரி மாவட்டம் இடலாக்குடியை சேர்ந்தவர் ஆவார். மற்றவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக களியக்காவிளை சப் இன்ஸ்பெக்டர் வில்சன் படுகொலையில் போலீஸ் தேடி வரும் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை பிடிக்க டெல்லி போலீசாரும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தென் மாநிலங்களில் மட்டும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புள்ள 11 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவர்களை உடன் கைது செய்யவும், அதில் முக்கிய புள்ளிகளை பிடிக்கவும் போலீசார் குஜராத், தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தீவிரவாத அமைப்பான ஐஎஸ் தென்னிந்திய பகுதிகளில் பல இடங்களிலும் செயல்படுவதாக டெல்லி போலீஸ் கண்டறிந்துள்ள நிலையில் கேரள, கர்நாடக, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த அமைப்பின் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. குமரி-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  தீவிரவாத அமைப்புகளில் தொடர்புள்ள 12 பேர் உள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை சம்பவத்தில் காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்குவது எல்லை பகுதியில் உள்ள கள்ளநோட்டு மாற்றுதல், தங்கம் கடத்தலில் ஈடுபடுகின்ற கும்பல்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த பகுதியில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகள் அதிகம் புழக்கத்தில் விடப்படுவதையும் போலீசார் கவனத்தில் கொண்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சப் இன்ஸ்பெக்டர் வில்சனை கொன்றவர்கள் மொத்தம் 16 பேர் கொண்ட தீவிரவாத குழுவினர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நாடு முழுவதும் பல நகரங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டவர்கள் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் ஒன்று சேர்ந்து சதி திட்டம் தீட்டியிருக்கின்றனர். தமிழகத்தில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்ட கும்பலை சேர்ந்தவர்கள் தான் களியக்காவிளையில் துப்பாக்கி சூடு நடத்தியவர் எனவும், சந்தேகிக்கப்படுகிறது. சப் இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்டு 4 நாட்கள் ஆகியுள்ள போதிலும் இதுவரை குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. தற்போதுள்ள நிலையில் தக்கலையில் 9 பேரிடமும், தென்காசியில் 4 பேரிடமும், பாறசாலையில் இருவரிடமும் உட்பட 15 பேரிடம் தனிப்படை போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒரு சிலரை விசாரித்துவிட்டு அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் தவிர இவர்களிடம் தொடர்பு வைத்திருந்தவர்களின் தொலைபேசி எண்களை வைத்து 100க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்ப கட்ட விசாரணைகள் நிறைவு பெறும் தருவாயில் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ வசம் செல்லும். அதனால் குமரி மாவட்ட எஸ்.பி நாத் தலைமையிலான தனிப்படைகள் இது தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணை பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகும் தருவாயில் வழக்கு விசாரணையை பின்னர் என்ஐஏ கையாளும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Investigation ,NIA ,
× RELATED தேர்தல் ஆணையம் அலுவலகம் முன்பாக...