×

துணைத்தலைவர்கள் தேர்தல் ஒத்திவைப்பு

திருமங்கலம், ஜன.12: திருமங்கலம் ஒன்றியம் சவுடார்பட்டி ஊராட்சி தலைவராக ஆண்டிச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர் தேர்தல் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற இருந்தது. மொத்தமுள்ள 9 வார்டு உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே வந்திருந்தனர். துணைத் தலைவர் தேர்தலில் குறைந்து 5 வார்டு உறுப்பினர்களாவது பங்கேற்றால்தான் நடத்த முடியும் என்பதால், சவுடார்பட்டி ஊராட்சியின் துணைத்தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. இதேபோல் கிழவனேரி ஊராட்சி தலைவராக ஏற்கனவே செல்வகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர் தேர்தலில் 9 வார்டு உறுப்பினர்களில் 4 உறுப்பினர்கள் மட்டுமே வந்ததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த இரண்டு ஊராட்சிகளிலும் துணைத் தலைவர் தேர்தலில் போதுமான கோரம் இல்லாததால் தேர்தல் நடத்த முடியவில்லை.

தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்தால் தான் மீண்டும் நடத்த முடியும் என்றனர்.‘மேலூர் ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் வார்டு உறுப்பினர்கள் வாக்களித்து துணை தலைவரை தேர்தெடுக்கும் பணி நேற்று துவங்கியது. இதில் தெற்கு தெருவில் உள்ள 12 வார்டு உறுப்பினர்களில் 6 பேர் மட்டுமே வாக்களிக்க வந்தனர். 7 பேர் வேண்டும் என தேர்தல் அதிகாரி கூறவே, மக்கள் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். மதியம் வரை போராட்டம் தொடரவே அதிகாரிகள் தப்பி காரில் ஏறினர். அந்த காரை வழிமறித்து மக்கள் போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டனர். இதனால் துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதேபோல் பூஞ்சுத்தி, அரசப்பன்பட்டி, குறிச்சிபட்டி ஆகிய ஊராட்சிகளில் போதிய வார்டு மெம்பர்கள் வரவில்லை என கூறி துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. மொத்தம் உள்ள 36 ஊராட்சிகளில் 22 ஊராட்சிகளில் துணை தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 10 இடங்களில் தேர்தல் நடக்க, 4 இடங்களில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. கொட்டாம்பட்டியில் உள்ள 26 ஊராட்சிகளில் 25 ஊராட்சிகளில் துணை தலைவர் தேர்வு செய்யப்பட்டார். குன்னாரம்பட்டியில் மட்டும் போட்டியில் கண்ணன் மற்றும் ஆசை என இருவரும் சமமாக வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து இருவரின் பெயரும் குலுக்கி போடப்பட அதில் கண்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Tags : Vice Presidents ,Election ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை வராத நிலையில்...