×

பழநி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகள் திமுக வசமானது: கிராம பஞ்சாத்துகளில் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

பழநி, ஜன.12: பழநி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகள் திமுக வசமானது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. கடந்த 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். நேற்று ஊராட்சி ஒன்றியத்தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடந்தது. பழநி சப்.கலெக்டர் உமா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான் ஆகியோர் தேர்தலை நடத்தினர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை 11 மணிக்கு தலைவருக்கும், மாலை 3.30 மணிக்கு துணைத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர்களை தவிர மற்றவர்கள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. பழநி ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளில் திமுக 7, சுயேட்சை 3, அதிமுக 5 ஆகிய இடங்களைப் பிடித்தது.

நேற்று காலை நடந்த தேர்தலில் ஒன்றியக்குழு தலைவராக ஈஸ்வரி கருப்புச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இவர் மறைந்த ஒன்றியச் செயலாளர் கருப்புச்சாமியின் மனைவி ஆவார். நேற்று பிற்பகல் நடந்த துணைத்தலைவருக்கான தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. இதானல் திமுகவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மொத்தமுள்ள 15 ஓட்டுக்களில் இருவரும் தலா 10 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், ஒன்றியச் செயலாளர்கள் சௌந்திரபாண்டியன், சாமிநாதன், நகரச் செயலாளர் தமிழ்மணி மற்றும் கட்சியினர் வாழ்த்தினர்.
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளில் 15 பதவிகள் திமுக கூட்டணியினர் கைப்பற்றினர். 5 இடங்களை மட்டுமே அதிமுகவினர் கைப்பற்றினர்.

நேற்று நடந்த மறைமுக தேர்தலுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சேகர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நளினா, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தலில் மொத்தமுள்ள 20 உறுப்பினர்களில் 15 பேர் கலந்து கொண்டனர். திமுகவைச் சேர்ந்த சத்தியாபுவனா ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பிற்பகலில் நடந்த துணைத்தலைவருக்கான தேர்தலில் திமுகவைச் சேர்ந்த தங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றவர்களை ஒட்டன்சத்திரம் எம்எல்ஏ சக்கரபாணி, ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணி மற்றும் கட்சியினர் பாராட்டி வாழ்த்தினர். கிராம பஞ்சாயத்துகளில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவி தேர்தல் நடந்தது. இதில் போதிய கோரம் இல்லாததால் கணக்கன்பட்டி மற்றும் மேலக்கோட்டை ஊராட்சிகளுக்கான துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Palani ,Union Leader ,Thoppampatti Panchayat ,Gram Panchayats ,
× RELATED அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம்...