×

சித்தரேவு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி முற்றுகை போராட்டம்

பட்டிவீரன்பட்டி, ஜன. 12: நேற்று சித்தரேவு ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர் மற்றும் 15 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கடந்த 6ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மகேஸ்குமார் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தலை நடத்தினார். இந்த துணைத்தலைவர் பதவிக்கு 4வது வார்டு உறுப்பினர் இருளாயி மற்றும் 9வது வார்டு உறுப்பினர் எழில்மாறன் ஆகிய இருவரும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று முடிந்தது. இதில் ஊராட்சி தலைவர் மற்றும் 15வது வார்டு உறுப்பினர்கள் உட்பட 16 பேர் ஓட்டளித்தனர். ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் எழில்மாறனுக்கு 9 ஓட்டுகளும், இருளாயிக்கு 7 ஓட்டுகளும் பதிவானதாகவும் 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் எழில்மாறன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு துணைத்தலைவராக எழில்மாறன் முறைப்படி அறிவிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பு ஊராட்சி மன்ற வளாகத்தில் ஒட்டப்பட்டது. இதற்கு சித்தரேவு ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி மற்றும் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் 8 பேர் உட்பட 9 பேரும் ஊராட்சி மன்ற வளாகத்தில் அமர்ந்து தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி ஊராட்சி மன்ற வளாகத்தில் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை அறிந்த இருதரப்பைச் சேர்ந்த ஆதரவாளர்களும் குவிந்ததால் பதற்றமான சூழ்நிலை உருவானது. அசம்பபவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் தேர்தல் நடத்தும் அலுவலரை போகவிடாமல் தடுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. பின்பு திண்டுக்கல் டி.எஸ்.பி வீரபாண்டி, ஆத்தூர் தாசில்தார் பாஸ்கரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் தேர்தலில் முறைகேடு நடந்திருந்தால் நீதிமன்றத்தை அணுகி அதற்கான தீர்வை பெறலாம். மறுதேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று போராட்டம் நடத்தியவர்களிடம் கூறினார்கள். இதனை ஏற்ற அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் 3 மணி நேரம் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுபற்றி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மகேஸ்குமார் கூறியதாவது, தேர்தல் முறையாகத்தான் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல் நடந்தபோது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Tags : Siege protests ,misuse ,election ,panchayat ,vice president ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...