×

கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் பதவி குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி

கும்மிடிப்பூண்டி, ஜன. 12: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான தேர்தல், தேர்தல் அலுவலர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி  கடந்த 30ம் தேதி நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 26 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மட்டும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குள் அனுப்பப்பட்டனர். அவர்களை கட்சி வாரியாக பிரித்து அதிமுகவினர் தனியாகவும், திமுகவினர் தனியாகவும் அமரவைக்கப்பட்டனர். இரு பக்கமும் தலா 13 பேர் இருந்ததால் வெற்றி பெறுவது யார் என்ற பதற்றமான சூழ்நிலை உருவாகியது.   ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான வேட்பாளராக அதிமுக தரப்பில் கே.எம்.எஸ்.சிவக்குமார், திமுக தரப்பில் இந்திரா தனலட்சுமி அறிவிக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது அதிமுக வேட்பாளர் கே.எம்.எஸ்.சிவக்குமாருக்கு 13 ஓட்டும், திமுக வேட்பாளர் இந்திரா திருமலைக்கு 13 ஓட்டுகளும் பதிவாகி இருந்தது.

தேர்தல் ஆணைய விதிப்படி குலுக்கல் முறையில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தேர்தல் அலுவலர் ரவி அறிவித்தார். இதையடுத்து இரு வேட்பாளர்களுடைய பெயரையும் தனித்தனியாக எழுதி ஒரு பெட்டியில் போட்டு குலுக்கப்பட்டது. பின்னர் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பகுதியை சேர்ந்த சிறுமி யோகபாலா  வரவழைக்கப்பட்டாள். அவள் பெட்டியில் இருந்த சீட்டில் ஒன்றை எடுத்தார்.  அதில், அதிமுக வேட்பாளர் கே.எம்.எஸ்.சிவக்குமார் பெயர் இருந்தது. அதைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளர் கே.எம்.எஸ்.சிவக்குமார் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் ரவி அறிவித்தார்.

Tags : Kummidipoondi Union ,Team Leader ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...