×

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் து.தலைவர் பதவி திமுக பிடித்தது

திருவள்ளூர், ஜன. 12: திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத்தலைவர் பதவியை திமுக மாவட்ட கவுன்சிலர்கள் கைப்பற்றியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில், மொத்தமுள்ள 24 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில்  திமுக 17, காங்கிரஸ் 1, அதிமுக 5, பாமக 1  கைப்பற்றியது. இதில், திமுக கூட்டணி 18 இடங்களை கைப்பற்றியதால், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவி திமுகவுக்கு உறுதியானது. இந்நிலையில், நேற்று மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில், மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், 12வது வார்டு உறுப்பினரும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் மகளுமான உமாமகேஸ்வரி கோபாலகிருஷ்ணன் போட்டியின்றி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  

பிற்பகல் நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவிக்கு 22வது வார்டு உறுப்பினரும், பூவை மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான டி.தேசிங்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் சால்வை அணிவித்து வாழ்த்தினார். பின்னர், வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : DMK ,District Panchayat Committee ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...