×

காயரம்பேடு ஊராட்சியில் இருளர் குடியிருப்பில் 21 குடிசைகள் எரிந்து சாம்பல்

கூடுவாஞ்சேரி, ஜன.12: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சி தமிழ்ச்செல்வி நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதன் அருகில், இருளர் இன மக்கள் வசிக்கும் சுமார் 30 குடிசை வீடுகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று மாலை, இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிசைகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள், டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அடுத்தடுத்து குடிசைகளில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், அப்பகுதியில் கடும் புகை மண்டமாக காட்சியளித்தது.

தகவலறிந்து மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த 21 குடிசை வீடுகள் எரிந்தன. குடிசைகளில் இருந்த ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, கட்டில், பீரோ, வாக்காளர் அட்டை உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. பின்னர் வீரர்கள், அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் இருக்க தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இதில் அப்பகுதி முழுவதும் ஒரு மணி நேரம் புகை மூட்டமாக இருந்தது. இதையடுத்து செங்கல்பட்டு தாசில்தார் சங்கர் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று, பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அருகில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தங்குவதற்கும், அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வருவாய் துறையினருக்கு தாசில்தார் உத்தரவிட்டார். புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார், மின்கசிவால் குடிசைகள் எரிந்ததா அல்லது நாசவேலையா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : Kayarampadu ,
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...