×

புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி

திருப்போரூர், ஜன.12:  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 18 ஆண்டுகளாக புகையில்லா போகி  கொண்டாடுவது குறித்து தமிழகம் முழுவதும் பல்வேறு வழிகளில் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதைதொடர்ந்து, 2020ம் ஆண்டுக்கான புகையில்லா போகி  கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்  வகையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி அரசு பள்ளிகளில் நடந்தது. இதையொட்டி செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி  மாணவர்கள் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்  ஏஞ்சலின்மெர்சி தலைமையில் உறுதி மொழி ஏற்றனர்.

‘‘எரிக்க மாட்டோம்..  எரிக்க மாட்டோம்... பழைய டயர்களை எரிக்க மாட்டேம்...  கொண்டாடுவோம்... கொண்டாடுவோம்... புகையில்லா போகி கொண்டாடுவோம்...  பாதுகாப்போம்... பாதுகாப்போம்... சுற்றுச்சூழலை பாதுகாப்போம்...’’ என்றும், டயர்,  ரப்பர், நெகிழி (பிளாஸ்டிக்) போன்ற ரசாயன பொருட்களை எரிக்க மாட்டோம் என்றும்  உறுதி மொழி எடுத்தனர். இந்த ரசாயன பொருட்களை பயன்படுத்தி எரிப்பதால்  சுற்றுச்சூழல் பாதிப்படைந்து காற்று மாசுபடுகிறது என்றும் மாணவர்களிடம்  பள்ளி கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு  துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

மேலும் மாணவர்களின் புகையில்லா போகி  கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலமும் நெம்மேலி பகுதி வீதிகளில்  நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி முதுகலை ஆசிரியர் யுவராஜ்,  உடற்கல்வி ஆசிரியர் லிவிங்ஸ்டன், கணித ஆசிரியர் ஏகாம்பரம் உள்பட பலர்  கலந்து கொண்டனர். உத்திரமேரூர்: உத்திரமேரூர்  அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி  மாணவ, மாணவிகளின் புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளா தலைமை  தாங்கி பேரணியை துவக்கி வைத்தார்.

திருப்புலிவனம் கிராமத்தில்  உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற விழிப்புணர்வு பேரணியில் போகி பண்டிகையன்று பிளாஸ்டிக்  பொருட்கள், டயர்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக்  பொருட்கள் இருப்பின் அவற்றை சேகரித்து துப்புரவு  ஊழியர்களிடம் வழங்க வேண்டும். புகையில்லா போகியை கொண்டாடி காற்று  மாசுபடுவதை தவிர்ப்போம் என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தி சென்றனர்.

Tags : bogey awareness rally ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 636 வருவாய்...