×

அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய மநீம நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

திருச்சி, ஜன.11: திருச்சிக்கு நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வந்தார். அவரை வரவேற்க அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக திருச்சி மநீம கிழக்கு கோட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் மீது கே.கே.நகர் போலீசாரும், துணைத்தலைவர் ரவிச்சந்திரன் மீது அரியமங்கலம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.
மூதாட்டியிடம் செயின் பறிப்பு: திருச்சி ரங்கத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி லலிதா (70). இவர் நேற்று முன்தினம் சுப்பிரமணியபுரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர், அவரது கழுத்திலிருந்த 6 பவுன் செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வீட்டில் புகுந்து 10 பவுன் திருட்டு: உறையூர், சீனிவாசாநகரை சேர்ந்தவர் கணேசன்(61). இவர் குடும்பத்துடன் கடந்த 8ம் தேதி ராமேஸ்வரம் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 10 பவுன் நகை திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஓடும் பஸ்சில் ஒருவர் சாவு: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் நாசர்உசேன்(40). இவர் ஈரோட்டிலிருந்து திருச்சிக்கு பஸ்சில் வந்தார். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பஸ் நின்றபோது அவர் எழுந்திருக்கவில்லை. மயங்கி கிடந்தார். அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
காப்பகத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை: மன்னார்குடியை சேர்ந்தவர் அருளப்பன்(81). வயது முதிர்ச்சி காரணமாக திருச்சி கிராப்பட்டியில் உள்ள காப்பகத்தி–்ல தங்கி இருந்தார். இந்நிலையில், காப்பகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு