×

முத்துப்பேட்டை, வலங்கைமான் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி

முத்துப்பேட்டை, ஜன.12: முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 15வார்டுகளில் அதிமுக 4, பாஜக மற்றும் பாமக தலா 1 உட்பட அதிமுக கூட்டணி 6 இடங்களிலும். திமுக கூட்டணியில் திமுக 3 இந்திய கம்யு+னிஸ்ட் கட்சி 1 இடங்களிலும், சுயேட்சையாக போட்டியிட்டவர்கள் ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை முத்துப்பேட்டை ஒன்றியக்குழு அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பரசு, ஒன்றிய ஆணையர் வெற்றியழகன் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேர்தல் தொடங்கிய நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அதிமுக சார்பாக 8பேரும், திமுக சார்பாக 6 பேரும் வருகை தந்திருந்தனர். திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜாம்பை கல்யாணசுந்தரம் என்கின்ற வேட்பாளர் நேற்று வாக்குப் பதிவுக்கு வரவில்லை. இந்நிலையில் நடைபெற்ற தேர்தலில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு திமுக சார்பில் சுயேச்சை மசோதா, அதிமுக சார்பில் கனியமுதா என்பவரும் போட்டியிட்டனர். அதனை தொடர்ந்து வாக்கு பதிவு நடைபெற்றது.
இதில் அதிமுக 8 வாக்குகளும், திமுக 5 வாக்குகளும் பெற்று அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அதன் பின்னர் மாலை துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் கஸ்தூரி என்பவர் மனு தாக்கல் செய்தார். திமுக தரப்பில் யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து அதிமுக வேட்பாளர் கஸ்தூரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட இருவருக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பரசு சான்றிதழ் வழங்கினார். அப்பொழுது ஒன்றிய ஆணையர் வெற்றியழகன், ஒன்றிய ஆணையர் (கிராம ஊராட்சி) சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
வலங்கைமான்: வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 ஒன்றியக்குழு உள்ளது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் அலுவலர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக காலை 11 மணிக்கு ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு 1 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் மற்றும் 6வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சங்கர் ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து கூட்ட அரங்கில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வாக்களித்தனர். பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சங்கர் 9 வாக்குகளும், திமுக சார்பில் போட்டியிட்ட அன்பரசன் 6 வாக்குகளும் பெற்றனர். அதிமுக 7 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மட்டும் இருந்த நிலையில் தலா ஒரு இடங்களை பெற்றிருந்த அதன் கூட்டணி கட்சியான தேமுதிக மற்றும் சுயேச்சை ஆதரவோடு ஒன்பது வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. அதனையடுத்து ஒன்றியக்குழு தலைவராக பொறுப்பெற்று கொண்ட சங்கர் ஒன்றியக்குழு கூட்ட பதிவேட்டில் கையொப்பம் இட்டார். பின்னர் மாலை நடைபெற்ற ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தலில் 10 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த வாசுதேவன் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

Tags : Muthupettai ,Valangaiman ,AIADMK ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு