×

பூதலூர் ஒன்றியக்குழு தேர்தலில் திமுக வெற்றி தலைவராக கல்லணை செல்லக்கண்ணு தேர்வு

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 12: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவராக திமுக ஒன்றியச்செயலாளரும், 10வது வார்டு கவுன்சிலருமான கல்லணைசெல்லக்கண்ணு (எ) அரங்கநாதன் தேர்வு செய்யப்பட்டார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பூதலூர் ஒன்றியக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட 16 பேரில் திமுக சார்பில் 8 பேரும், அதிமுக சார்பில் 4 பேரும், அமமுக சார்பில் 2 பேரும், பிஜேபி மற்றும் சிபிஐ தலா ஒரு இடமும் பெற்றனர். 16வது வார்டு உறுப்பினர் தேர்தலில் சிபிஐ வேட்பாளர் லதா 1087 வாக்குகளும், கிடார் சின்னத்தில் போட்டியிட்ட வேலம்மாள் 1053 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் சிபிஐ உறுப்பினராக போட்டியிட்ட லதாவிற்கு எதிராக வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக அவரை எதிர்த்து கிடார் சின்னத்தில் போட்டியிட்ட வேலம்மாள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை ஏற்று சிபிஐ உறுப்பினர் லதா 20ம் தேதி வரை தலைவர் தேர்வு உள்ளிட்ட கூட்டங்களில் கலந்து கொள்ள கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் இரு அணியிலும் பரபரப்பு அதிகமானது.
இந்நிலையில் ஒன்றியக்குழு தலைவரை தேர்வு செய்ய நேற்று (11ம் தேதி) ஒன்றிய கூட்ட அரங்கில் ரகசிய ஓட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்திற்கு வந்த சிபிஐ உறுப்பினர் லதா நீதி மன்ற ஆணையை காட்டி திருப்பி அனுப்பப்பட்டார். முன்னதாக திமுக உறுப்பினர்கள் கல்லணை செல்லக்கண்ணு(எ) அரங்கநாதன், பிரேமா, ரம்யா, கேசவமூர்த்தி, மயில்சாமி, அருமைச்செல்வி, ரேவதி ஆகிய 7 பேரும் கூட்ட அரங்கிற்கு வந்தனர்.
திமுக உறுப்பினர் கென்னடி சற்று தாமதமாக பின்னர் தனியாக வந்தார். அடுத்தடுத்து பிஜேபி உறுப்பினர் பூண்டி.வெங்கடேசன், அதிமுக உறுப்பினர்கள் செந்தில்குமார், தேன்மொழி, மதுபாலா, நாகலெட்சுமி ஆகியோர் வந்தனர். பின்னர் அமமுக உறுப்பினர்கள் சபீதா, சுப்பிரமணியன் அவைக்கு வந்தனர்.
தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்டெல்லா ஞானமணி பிரமீளா, பூதலூர் ஒன்றிய ஆணையர்கள் கோபாலகிருஷ்ணன், கணேசன் ஆகியோர் முன்னிலையில் தலைவர் தேர்தல் நடந்தது. திமுக சார்பில் தலைவராக 10வது வார்டு உறுப்பினர் கல்லணை செல்லக்கண்ணு(எ) அரங்கநாதனை 5வது வார்டு உறுப்பினர் ரம்யா முன்மொழிந்தார். 8வது வார்டு உறுப்பினர் அருமைச்செல்வி இதனை வழிமொழிந்தார்.
இதேபோல் 11வது வார்டு உறுப்பினர் (பிஜேபி) பூண்டி.வெங்கடேசனை 3வது வார்டு உறுப்பினர் தேன்மொழி முன்மொழிந்தார். 14வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் வழிமொழிந்தார். உறுப்பினர்கள் 15 பேரும் ரகசிய வாக்குகளை அளித்தனர். வாக்கு எண்ணிக்கையில் கல்லணைசெல்லக்கண்ணு(எ) அரங்கநாதன் 9 வாக்குகளும், பூண்டி.வெங்கடேசன் 6 வாக்குகளும் பெற்றனர். கல்லணைசெல்லக்கண்ணு(எ) அரங்கநாதன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் ஒன்றிய ஆணையர்கள் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட புதிய ஒன்றியக்குழு தலைவர் கல்லணைசெல்லக்கண்ணு(எ) அரங்கநாதனுக்கு ஆணை வழங்கி பதவியில் அமர்த்தினர்.
பின்னர் மாலையில் பூதலூர் நடந்த தேர்தலில் ஒன்றியக் குழு துணைத் தலைவராக 12 வது வார்டு உறுப்பினர் சுப்பிரமணியன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags : DMK ,pooledur union election ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி