×

குடிநீர் கட்டணம் கட்டாவிட்டால் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையார் எச்சரிக்கை

காரைக்கால், ஜன.12: குடிநீர் கட்டணம் கட்டாவிட்டாலும், கொம்யூன் பஞ்சாயத்து விதிகளை மீறினாலும், குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, காரைக்கால் திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: எனது தலைமையில் உதவிப் பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலைப் பொறியாளர் மெய்யழகன், வருவாய் ஆய்வாளர் வீரசெல்வம் உள்ளிட்ட குழுவினர், வாஞ்சூர் பகுதியில் செயல்பட்டுவரும் மகாலட்சுமி கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் குடிநீர் குழாய்களை சோதனை செய்தனர். அப்போது விதிப்படி முக்கால் அங்குலம் அளவில் குழாய் இருக்க வேண்டிய நிலையில், ஒன்றரை அங்குலம் அளவில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு நீர் உறிஞ்சப்பட்டது கண்டறியப்பட்டது.
இதனால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், நிறுவனத்தின் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்ற ஆய்வுகள் திருமலைராயன்பட்டினம் கொம்யூன் முழுவதும் தொடரும்.
எனவே பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர வரி பாக்கிகளை அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : panchayat commissioner ,Commune ,
× RELATED திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூ.வை...