×

திருப்பூர் மாவட்டத்தில் 7 ஒன்றிய தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது

திருப்பூர், ஜன.12: திருப்பூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. 4 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
தமிழகத்தில் கடந்த மாதம் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி ஆகிய இரு நாட்கள் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பின்னர், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய நாட்களில் வெளியாகியது.  
தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஆகியோர் பதவி ஏற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளுக்கும், 265 துணைத்தலைவர், 13 ஒன்றியக்குழு தலைவர்கள் மற்றும் 13 ஒன்றியக்குழு துணைத்தலைவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உட்பட 293 பதவிகளுக்கு நேற்று  மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவருக்கு அ.தி.மு.க. அணியில் இருவர் போட்டியிட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 17 மாவட்ட கவுன்சிலர்கள். அதில் 14 பேர் ஆதரித்து வாக்களித்ததால் அ.தி.மு.க.வை சேர்ந்த குண்டடம் 13வது வார்டு மாவட்ட கவுன்சிலர் சத்தியபாமா வெற்றி பெற்றார்.
துணை தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சிவகாமி போட்டியின்றி வெற்றி பெற்றார்.
மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில்  7 ஒன்றிய தலைவர், 7 துணை தலைவர் பதவிகளை தி.மு.க.வும், 4 ஒன்றிய தலைவர், 6 துணை தலைவர் பதவிகளை அ.தி.மு.க.வும், 2 ஒன்றிய தலைவர் பதவியை சுயேட்சைகளும் கைப்பற்றினர். அதன் விவரம் வருமாறு:-
1.அவினாசி ஒன்றியத்தில் தலைவர் பதவியை ஜெகதீசனும் (அதிமுக), துணை தலைவர் பதவியை பிரசாத்குமாரும் (தேமுதிக) பெற்றனர்.  
2.தாராபுரம் ஒன்றியத்தில் தலைவர் பதவியை செந்தில்குமார் (திமுக), துணை தலைவர் பதவியை சசிக்குமார்(சுயேட்சை-திமுக ஆதரவு).
3. குடிமங்கலம் ஒன்றியத்தில் தலைவர் பதவியை சுகந்தி முரளி (அதிமுக), துணை தலைவர் பதவியை புஷ்பராஜ்  (அதிமுக) ஆகியோர் பெற்றனர்.
 4. மடத்துக்குளம் ஒன்றியத்தில் தலைவர் பதவியை காவ்யா (திமுக-போட்டியின்றி தேர்வு), துணை தலைவர் பதவியை ஈஸ்வரசாமி (திமுக -போட்டியின்றி தேர்வு) பெற்றனர்.
5. மூலனூர் ஒன்றியத்தில் தலைவர் பதவியை சுமதி (திமுக -போட்டியின்றி தேர்வு), துணை தலைவர் பதவியை பழனிச்சாமி (திமுக) ஆகியோர் பெற்றனர்.
 6. பல்லடம் ஒன்றியத்தில் தலைவர் பதவியை தேன்மொழி (திமுக), துணை தலைவர் பதவியை பாலசுப்பிரமணியம் (திமுக) பெற்றனர்.
7.பொங்கலூர் ஒன்றியத்தில் தலைவர் பதவியை குமார் (திமுக) , துணை தலைவர் பதவியை அபிராமி (திமுக) ஆகியோர் பெற்றனர்.
8.உடுமலை ஒன்றியத்தில் தலைவர் பதவியை மகாலட்சுமி (திமுக) , துணை தலைவர் பதவியை சண்முக வடிவேல் (திமுக) ஆகியோர் பெற்றனர்.
 9.வெள்ளகோவில் ஒன்றியத்தில் தலைவர் பதவியை வெங்கடேச சுதர்சன்(அதிமுக-போட்டியின்றி தேர்வு), துணை தலைவர் பதவியை விஜயா (அதிமுக-போட்டியின்றி தேர்வு)ஆகியோர் பெற்றனர்.
 10.காங்கயம் ஒன்றியத்தில் தலைவர் பதவியை மகேஷ்குமார் (சுயேட்சை), துணை தலைவர் பதவியை ஜீவிதா ஜவகர்(சுயேட்சை-திமுக ஆதரவு).
11.குண்டடம் ஒன்றியத்தில் தலைவர் பதவியை சதீஸ் என்கிற குப்புசாமி (சுயேட்சை), துணை தலைவர் பதவியை செந்தில்குமார்  (அதிமுக) ஆகியோர் பெற்றனர்.
 12.ஊத்துக்குளி ஒன்றியத்தில் தலைவர் பதவியை பிரேமா (திமுக), துணை தலைவர் பதவியை சிவகுமார் (அதிமுக) ஆகியோர் பெற்றனர்.
13.திருப்பூர் ஒன்றியத்தில் தலைவர் பதவியை சொர்ணாம்பாள் (அதிமுக) , துணை தலைவர் பதவியை தேவிஸ்ரீ(சுயேட்சை-அதிமுக ஆதரவு)  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றதால் அ.தி.மு.க. வைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் கிராம ஊராட்சித் துணைத்தலைவரைத் தேர்வு செய்வதற்கு மறைமுகத் தேர்தலுக்கான கூட்டம்  காலை 11  மணிக்கு துவங்கியது.
தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொங்கூர் கிராம ஊராட்சி மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெல்லம்பட்டி மற்றும் எல்லப்பாளையம்புதூர் ஆகிய கிராம ஊராட்சிகளில் போதிய உறுப்பினர்கள்  இல்லாததால் கிராம ஊராட்சி துணைத்தலைவருக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இம்மூன்று ஊராட்சிகளிலும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிக்கும் நாளில் பின்னர் தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 262 கிராம ஊராட்சிகளில் கிராம ஊராட்சி துணைத்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
262 கிராம ஊராட்சிகளில் 75 ஊராட்சிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 55 கிராம ஊராட்சிகளில் பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையிலும் 20 கிராம ஊராட்சிகளில் குலுக்கல் முறையிலும் கிராம ஊராட்சி துணைத்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 187 கிராம ஊராட்சிகளில் கிராம ஊராட்சி துணைத்தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags : DMK ,union leaders ,district ,Tirupur ,
× RELATED நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்