×

பனியன் தொழிலாளர்களுக்கு நாளை முதல் பொங்கல் விடுமுறை

திருப்பூர், ஜன.12: திருப்பூர் ஆடை உற்பத்தி மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்களில், தமிழகம், வெளிமாவட்ட தொழிலாளர் ஆறு லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
தொழிலாளர்களுக்கு, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுதவிர, பொங்கல், தீபாவளி பண்டிகைக்கு நீண்டநாள் விடுப்பு எடுப்பதை தொழிலாளர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
குறிப்பாக, பெரும்பாலான தமிழக தொழிலாளர்கள், கூடுதல் நாட்கள் விடுப்பு எடுத்து, சொந்த ஊர்களுக்குச் சென்று, பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வரும் 14ம் தேதி போகி, 15ம் தேதி பொங்கல் பண்டிகை, 16ம் தேதி, மாட்டுப்பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
 பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக, ஆடை உற்பத்தி, ஜாப் ஒர்க் நிறுவனங்கள், வரும் 14ம் தேதி முதல் விடுமுறை அளிக்க உள்ளன. பனியன் தொழிலாளர்களுக்கு சனிக்கிழமை தோறும் வாரச் சம்பளம் பட்டுவாடா செய்யப்படுவது வழக்கம்.
பெரும்பாலான உள்நாட்டு, ஏற்றுமதி நிறுவனங்கள் வசம் ஆர்டர்கள் அதிகம் உள்ளன. பொங்கலுக்குச் செல்லும் தொழிலாளர், திரும்புவதற்கு பத்து நாட்களுக்கு மேலாகிவிடும். அதனால், அவசர ஆர்டர்களை கையாள்வதற்காக, ஞாயிற்றுக்கிழமையான 12ம் தேதியும் பெரும்பாலான நிறுவனங்கள் இயங்க உள்ளன. அன்று சம்பளம் வழங்கி, 13ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது. பொங்கலுக்குப்பின், அதிக ஆர்டர் உள்ள நிறுவனங்கள், 18ம் தேதி முதலும் மற்ற நிறுவனங்கள், 20ம் தேதி முதல் மீண்டும் இயக்கத்தை துவங்க உள்ளன. ஆனாலும், பத்து முதல் 15 நாட்களுக்குப் பின்னரே, தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. வடமாநில தொழிலாளர் அதிகம் உள்ளதால், அந்த தொழிலாளர்களைக்கொண்டு அவசர ஆர்டர்களை கையாள பின்னலாடை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

Tags : holiday ,Bunyan ,
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!