×

‘சர்ச் லைட்’ பற்றாக்குறை: வனத்துறையினர் தவிப்பு

கோவை, ஜன.12: கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் 7 வனச்சரகம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் 43 மலை குடியிருப்பு (ஷெட்டிமெண்ட்), 82 கிராமங்கள் உள்ளன. சில ஷெட்டில்மெண்ட்டிற்கு சோலார் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இரவில் ஷெட்டில்மெண்ட் மற்றும் மலை கிராமங்களை சுற்றிலும் யானைகள் வலம் வருகின்றன.
சமீபத்தில் சோமையனூர், நரசீபுரம், மதுக்கரை, கரடிமடை, நரசீபுரம் பகுதியில் ரோடு, வழித்தடங்களில் யானைகள் நிற்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். ஒரே பாதையில் யானை, மனிதர்கள் செல்லும் பாது அசம்பாவித சம்பவங்கள் நடப்பதாக தெரிகிறது. குறிப்பாக இரவு, அதிகாலை நேரங்களில் யானை பாதைகளில் குறுக்கிடும் மனிதர்களை யானைகள் தூக்கி வீசி கொன்று விடுகின்றன.
மலைவாழ் மக்கள், ஷெட்டில்மெண்ட்காரர்கள் யானை வலசை பாதையை (காரிடார்) பயன்படுத்தக்கூடாது. இரவில் யானை நடமாட்டம் உள்ள பகுதிக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். வனப்பகுதி ரோட்டில் குறிப்பாக ஆனைகட்டி ரோடு, மருதமலை ரோடு, பூண்டி ரோட்டில் யானை நடமாட்டம் இருப்பதால், வாகனங்களில் செல்பவர்கள் உஷாராக செல்லவேண்டும். வாகனங்களை வனப்பகுதி ரோட்டில் நிறுத்திவிட்டு ஓய்வு எடுக்கக்கூடாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யானைகளை விரட்ட வனத்துறை வசம் போதுமான சர்ச் லைட் கிடையாது. வன எல்லை கிராமங்களுக்கு சர்ச் லைட் வழங்கும் திட்டமும் முடங்கி கிடக்கிறது. இரவு நேரத்தில் யானைகள் வந்தால் கிராம மக்களால் கண்டறிய முடியாத நிலையிருக்கிறது. எனவே சர்ச் லைட் தரவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சர்ச் லைட் மூலமாக 1 கி.மீ. தூரம் வரை யானை நடமாட்டத்தை அறிய முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED பயணிகள் கூட்டத்தில் புகுந்த பேருந்து