×

தமிழகத்தில் உள்ள 27 உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்ற முடிவு

கோவை,ஜன.12: தமிழகத்தில் உள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றுவதற்கு தேவையான விவரங்களை சமர்பிக்குமாறு பல்கலைக்கழக பதிவாளர்கள் மற்றும் கல்லூரி கல்வி இணை இயக்குனர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமாக 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. உறுப்பு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவுகள் பல்கலைக்கழக நிதியில் இருந்தே வழங்கப்படுகிறது. இதனால் பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்டது.
இந்நிலையில் கூடுதல் நிதிச்சுமையை தவிர்க்கும் வகையில்  பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றும் அறிவிப்பை கடந்தாண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் 110-விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு முதற்கட்டமாக 14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கலை கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்தது.
இந்நிலையில் மீதமுள்ள 27 உறுப்பு கல்லூரிகளையும் அரசு
கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றுவதற்கு தேவையான விபரங்களை சமர்பிக்க கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அனைத்து பல்கலைகழக பதிவாளர்கள் மற்றும் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் கடந்தாண்டு 14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டு 2019-20-ம் கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெற்று இயங்கி வருகின்றன. மீதமுள்ள 27 உறுப்பு கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளாக மாற்றுவதற்கு தேவையான விபரங்களை ஒருங்கிணைத்து அரசிற்கு அனுப்ப ஏதுவாக விபரங்களை பூர்த்தி செய்து dceqsection@gmail.com என்ற முகவரிக்கு வரும் 21-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : member colleges ,government colleges ,Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...