×

மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் 2,397 பேருக்கு பொங்கல் பரிசு

கோவை, ஜன. 12:  கோவை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் 2,397 பேருக்கு பொங்கல் பரிசுப்பொருட்களை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
மாநகராட்சி கமிஷனர் ஸ்ரவன்குமார் ஜடாவத் தலைமை தாங்கினார். விழாவில், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, 1,543 ஆண் துப்புரவு பணியாளர்கள், 854  பெண் துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 2,397 தொழிலாளர்களுக்கு கரும்பு, வெல்லம், சர்க்கரை, நெய், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பரிசுப்பொருட்கள் மற்றும் சீருடை வழங்கினார். இதன் மதிப்பு ரூ.42.19 லட்சம் ஆகும்.
விழாவில், மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்ன ராமசாமி, தெற்கு மண்டல உதவி கமிஷனர் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் இராம.துரைமுருகன், ஆர்டிஓ தனலிங்கம், மாநகராட்சி உதவி கமிஷனர் சுந்தர்ராஜன் (பணியமைப்பு), நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகா, உதவி செயற்பொறியாளர்  சுந்தர்ராஜன், மண்டல சுகாதார அலுவலர்கள் லோகநாதன், ராதாகிருஷ்ணன், சந்திரன், குணசேகரன், தெற்கு மண்டல நிர்வாக அலுவலர் தமிழ்வேந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : corporation cleaning workers ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...