×

பெருந்துறை ஒன்றிய தலைவர் தேர்தலில் அமைச்சர் சூழ்ச்சியை முறியடித்த அதிமுக எம்எல்ஏ

ஈரோடு, ஜன. 12: ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. கடந்த ஆண்டுகளில் இந்த 14 ஒன்றியங்களும் அதிமுக வசம் இருந்து வந்த நிலையில், இம்முறை நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில், தலைவர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றியத்தை திமுக எளிதில் கைப்பற்றும் நிலை உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும்கூட அதிமுக எதிர்பார்த்த வெற்றியை இந்த தேர்தலில் பெற முடியவில்லை. இது, அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வரும் நிலையில், கட்சியை வெற்றி பெறச்செய்வதற்காக பெரிய அளவில் முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை என்று அதிமுகவினரே புகார் தெரிவித்துள்ளனர். கட்சிக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக அமைச்சர் கருப்பணன் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 12 உறுப்பினர்களில், அதிமுக கூட்டணி 5 இடங்களிலும், திமுக கூட்டணி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், அதிமுகவை சேர்ந்த அதிருப்தி வேட்பாளர்கள் 4 பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவுக்கு எதிராக, சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரை, யூனியன் தலைவராக்க அமைச்சர் கருப்பணன் முயற்சித்ததாகவும், இதை பெருந்துறை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் தலைமையிலான நிர்வாகிகள் முறியடித்து, அதிமுகவை சேர்ந்த 7வது வார்டு உறுப்பினர் சாந்தி என்பவரை ஒன்றிய குழு தலைவராக தேர்வுசெய்ய வைத்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, அமைச்சர் கருப்பணனுக்கும், பெருந்துறை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் காரணமாக தோப்பு வெங்கடாச்சலத்தின் அணியை சேர்ந்தவர்களை, அமைச்சர் கருப்பணன் வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டு, கட்சிக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட்டவரை யூனியன் தலைவராக கொண்டுவர ஆதரவு அளித்து வருவதற்கான ஆடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் அளிக்க தோப்பு வெங்கடாச்சலம் அணியினர் முடிவு செய்துள்ளனர்.
அமைச்சர் கருப்பணனை, ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து நீக்காவிட்டால், அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஈரோடு புறநகர் மாவட்டத்தில் அதிமுக ஒரு எம்எல்ஏ சீட்கூட பெற முடியாத நிலை ஏற்படும் என தோப்பு வெங்கடாச்சலத்தின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு பிறகு இதுதொடர்பாக கட்சி தலைமையிடம் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் ஈரோடு மாவட்ட அதிமுக தொண்டர்களிடம் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

Tags : AIADMK MLA ,
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்