×

ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க. 8, தி.மு.க. 4 ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றியது

ஈரோடு, ஜன. 12:  ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க. 8 ஒன்றிய தலைவர் பதவியையும், தி.மு.க. 4 ஒன்றிய தலைவர் பதவியையும் கைபற்றியது. 2 ஒன்றியங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நேற்று அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் நடந்தது.
கோபி ஒன்றியம்: இங்கு மொத்தம் 16 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகளில் அ.தி.மு.க.வும், ஒரு வார்டில் பா.ம.க.வும், ஒரு வார்டில் தி.மு.க.வும் வெற்றி பெற்றனர். இதையடுத்து நேற்று நடந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த 10வது வார்டு உறுப்பினர் மவுதீஸ்வரன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அம்மாபேட்டை ஒன்றியம்: இங்கு மொத்தம் 17 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகளை அ.தி.மு.க. கூட்டணியும், 4 வார்டுகளை தி.மு.க. கூட்டணியும், சுயேட்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். இதையடுத்து 4வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் விஜயநிர்மலா தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
நம்பியூர் ஒன்றியம்: இங்கு மொத்தம் 13 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகளை அ.தி.மு.க. கூட்டணியும், 2 வார்டுகளை தி.மு.க. கூட்டணியும், 1 வார்டை சுயேட்சையும் கைப்பற்றி இருந்தனர். இதையடுத்து 3வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சுப்பிரமணியம் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பவானி ஒன்றியம்: இங்கு மொத்தம் 17 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. கூட்டணி 11 வார்டுகளிலும், தி.மு.க. கூட்டணி 2 வார்டுகளிலும், சுயேட்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். தலைவராக 8வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் பூங்கோதை தேர்வு செய்யப்பட்டார்.
மொடக்குறிச்சி ஒன்றியம்: இங்கு மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. கூட்டணி 10 வார்டுகளிலும், தி.மு.க. கூட்டணி 7 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 9வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் கணபதி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அந்தியூர் ஒன்றியம்: இங்கு மொத்தம் 16 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. கூட்டணி 7 வார்டுகளிலும், அ.தி.மு.க. 7 வார்டுகளிலும், பா.ம.க. இரு வார்டிலும், மா.கம்யூ. ஒரு வார்டிலும் வெற்றி பெற்றதால், 7வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் வளர்மதி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பெருந்துறை ஒன்றியம்: இங்கு மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. கூட்டணி 5 வார்டுகளிலும், தி.மு.க. கூட்டணி 3 வார்டுகளிலும் அ.தி.மு.க.வை சேர்ந்த அதிருப்தி வேட்பாளர்கள் 4 பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில் தி.மு.க. உறுப்பினர்கள் நடுநிலை வகித்ததால் 7வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் சாந்தி ஒன்றியக்குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  
சென்னிமலை ஒன்றியம்: இங்கு மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 7  வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும்,  சுயேட்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க. அதிருப்தி வேட்பாளர் ஒரு வார்டிலும்  வெற்றி பெற்றிருந்த நிலையில் தி.மு.க. 4வது உறுப்பினர் காயத்ரி தலைவராக  தேர்வு செய்யப்பட்டார்.
கொடுமுடி ஒன்றியம்:
இங்கு மொத்தம் 6 வார்டுகள் உள்ளன. தி.மு.க. கூட்டணி 4  வார்டுகளிலும், அ.தி.மு.க. கூட்டணி ஒரு வார்டிலும், சுயேட்சை ஒரு வார்டிலும்  வெற்றி பெற்றிருந்தனர். இதையடுத்து 3வது வார்டு தி.மு.க. உறுப்பினர் லட்சுமி  ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பவானிசாகர் ஒன்றியம்: இங்கு மொத்தம் 13 வார்டுகள் உள்ளன. இதில் 7  வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணியும், 6 வார்டுகளில் தி.மு.க. கூட்டணியும் வெற்றி  பெற்றன. இதையடுத்து அ.தி.மு.க.வை சேர்ந்த சரோஜா பழனிச்சாமி 7 வாக்குகள் பெற்று ஊராட்சி ஒன்றியக்குழு  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 6வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வை  சேர்ந்த கவுன்சிலர் பாலன் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவராக  தேர்வு செய்யப்பட்டார்.
சத்தியமங்கலம் ஒன்றியம்: இங்கு மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. தி.மு.க. கூட்டணி 9 வார்டுகளிலும், அ.தி.மு.க. கூட்டணி 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தன. இதில் 11வது வார்டு தி.மு.க.வை சேர்ந்த இளங்கோ 8 வாக்குகள் பெற்று ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 6வது வார்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வை சேர்ந்த சுப்புலட்சுமி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தாளவாடி ஒன்றியம்:  
இங்கு மொத்தம் 10 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க 2 வார்டுகள், மா.கம்யூனிஸ்ட்,  இ.கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு வார்டு என தி.மு.க கூட்டணி 5  வார்டுகளைப் பெற்றிருந்தது. அ.தி.மு.க ஒரு வார்டிலும், அ.ம.மு.க மூன்று வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றிருந்தனர். இதில் 8வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  ரத்தினம்மாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 4வது  வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் பாபு (எ)  முஜிபுல்லா ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவராக வெற்றி பெற்றார்.
 இதன் மூலம் கொடுமுடி, சத்தியமங்கலம், சென்னிமலை, தாளவாடி என 4 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை தி.மு.க கைப்பற்றி உள்ளது. கோபி, அம்மாபேட்டை, நம்பியூர், பவானி, மொடக்குறிச்சி,  பவானிசாகர், அந்தியூர், பெருந்துறை ஆகிய 8 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை  அ.தி.மு.க. கைப்பற்றியது. ஈரோடு, டி.என். பாளையம் ஆகிய 2 ஒன்றியங்களுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,panchayat unions ,district ,Erode ,President ,Union ,DM. 4 ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...