×

தலைச்சோலை ஊராட்சியை கோட்டை விட்ட திமுகவினர்

ஏற்காடு, ஜன.12: ஏற்காடு ஒன்றியத்திலுள்ள தலைச்சோலை ஊராட்சியில் தங்களில் யார் துணை தலைவராவது என்ற போட்டியில் திமுகவினர் துணை தலைவர் பதவியை கோட்டை விட்டதால், அதிமுக உறுப்பினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏற்காடு ஒன்றியம், தலைச்சோலை ஊராட்சியில் மொத்தமுள்ள 9 வார்டுகளில், திமுக 6 வார்டுகளையும், அதிமுக 2 வார்டுகளையும், பாஜ 1 வார்டிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், நேற்று துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் துவங்கியபோது, திமுகவை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் யார் துணை தலைவராவது என்பது குறித்த தலைச்சோலைக்கு அருகில் உள்ள விஆர்ஓ பகுதிக்கு சென்று அங்கு பேசிக்கொண்டிருந்தனர். மதியம் 12.30 மணி வரை தேர்தல் நடைபெறாததால், அங்கு வந்த ஏற்காடு பிடிஓ ராமசந்தர், அங்கிருந்த 4 உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரை வைத்து தேர்தல் நடத்த முடிவு செய்தார். பின்னர் அங்குள்ள உறுப்பினர்களிடம் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் மனுதாக்கல் செய்யலாம் என கூறினார்.

இதனையடுத்து, அங்கிருந்த அதிமுகவை சேர்ந்த தேவகி என்பவர் மனுதாக்கல் செய்தார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், தேவகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அறிவிப்பு வெளியான பின் வந்த திமுகவை சேர்ந்த உறுப்பினர் ராஜா மனுதாக்கல் செய்வதாக கூறினார். மனுதாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்துவிட்டதால், தேர்தல் அலுவலர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர்.
துணை தலைவர் பதவிக்கு உறுப்பினர்களின் பலம் இருந்தும் தங்களுக்குள்ளான போட்டியில் பதவியை கோட்டை விட்டதால், திமுகவினர் தலையில் அடித்து கொண்டு அங்கிருந்து சென்றனர். இதேபோல், ஏற்காடு டவுன் ஊராட்சி துணை தலைவராக பாலு, நாகலூர் ஊராட்சி துணை தலைவராக குப்புசாமி, செம்மநத்தம் ஊராட்சி துணை தலைவராக சிவமூர்த்தி, மஞ்சக்குட்டை ஊராட்சி துணை தலைவராக சரவணகுமார், வெள்ளக்கடை ஊராட்சி துணை தலைவராக கரியமலச்சி, வேலூர் ஊராட்சி துணை தலைவராக சித்தையன், வாழவந்தி ஊராட்சி துணை தலைவராக குப்புசாமி, மாரமங்கலம் ஊராட்சி துணை தலைவராக மலர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி